Monday, January 25, 2016

என்னவள் கிறுக்கல்

ரோஜா இதழில் பனித்துளி
என் தேவதை முகத்தில் சிறு பரு .

வேடன் கைபடாத வில்
புருவம்
எனை தாக்கும் விழி
அம்புகள்.

நக்கீரன் ஏற்றுக்கொள்ளும் நறுமணம்
நங்கை அவள் கூந்தல்
மலர்வனம்

கொடிகள் கெஞ்சும்
அவள் இடையழகை
மயில்கள் பழகும்
அவள் நடையழகை.

பொருமையில் அவள் குணம் பூமியை மிஞ்சும்
முறைத்திட்டால்
புயலும் கூட அஞ்சும்.

கறையில்லா வெண்ணிலா
என் வாழ்விற்க்கு
ஒளி தந்த பெண்நிலா

என்பிம்பம் காட்டும்
கண்ணாடி
என்றும் அவளே
என் உயிர் நாடி..!

Wednesday, January 20, 2016

கிறுக்கியவைகளில் சில துளிகள் - கசல்


கிறுக்கியவைகளில் சில துளிகள் -கயல்விழி
இரவும் பகலும்
இணைந்தே இருக்கின்றது உன்
விழிக்குள் கறுப்பு வெள்ளையாய்

பாவம் என்னைப் போல் இன்னும் எத்தனை உயிர்கள்
பலியாக போகின்றனவோ
***************************

கொடிய விஷம் யாதெனில்
உன் கன்னத்து குழிகளே
தினமும் தான் பிணமாகிறேன்.
****************************

நீ பிரம்மனின் மகளாய் தான் இருக்கக்கூடும்
என்னையும் மாற்றிவிட்டாய் படைப்பாளியாய்.
**********************

முற்றத்து மல்லிகையோ
தோட்டத்து மல்லிகையோ
தோற்றுத்தான் போகிறது
உன் சோம்பல் முறிப்பின் முன்
****************************

நானும் திருநங்கை தான்
உன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.!
****************************

என்னை நீ திராட்சை என்றதன் அர்த்தம்
புரிகிறது
என் உதிரத்தை பருகிக்கொண்டிருக்கின்றாய்
பீராக.
**************************

அமிர்தம் என்றே அருந்தினேன் உன் காதலை
அளவிற்க்கு அதிகமானால் அமிர்தமும்
நஞ்சு என்பதை மறந்து
**************************

அலையாக நீயும்.
நுரையாக நானும்.
நீ அடித்துக்கொண்டே
இருக்கிறாய்
நான் சிதறிக்கொண்டே
இருக்கிறேன்
****************************

நீ எனக்கு ஒளி விளக்கு
நான் உனக்கு விட்டில் பூச்சி
**************************

முட்டைக்குள் கருவாய் உன்னை
வைத்தேன்
நீ உயிர்பெற்று
நடமாடினாய்
நான் உடைப்பட்டு
தெருவாகினேன் .
***************************

நீ கோயிலில் பூஜிக்கப்பட வேண்டியவள் தான்
கற்சிலை போல்
உன் இதயமும்.
****************************

தீ
பயிற்சி பெறட்டும்
உன் வார்த்தைகளிடம்
எப்படி சுடுவதென்று.
************"**********

நீயும் எனக்கு அன்னை
தான்
பைத்தியக்காரன், முட்டாளென
தினமொறு பெயர் சூட்டுகிறாய்
***************************

தூக்கு கயிறாய் நீ
இருப்பாய் என்றால்
கொடு
மரண தண்டனை
**************************

வரமாய் சபித்திடு
செருப்பாய் உன்னை காக்க
*******************"*******

நீ கொடுத்த கண்ணீருக்கு
தினமும்
வெட்டப்படும் வெங்காயமே சாபம் பெறுகிறது என் அன்னையிடம்.
***************************

அழைப்பிதழோடு வந்து
மரணிக்கச் சொல்கிறாய்
பூவும் பொட்டோடும் நீ
புதைக்குழிக்குள் நான்.
***************************

என் காதல் மாட்டிக்கொண்டது -உன்னிடம்
முள்ளில் விழுந்த சேலையாய்.
***************************

உன் சிரிப்"பூ"க்களை
சேமிக்கின்றேன்
என் கல்லறை தனிமைக்கு துணையாய்.
****************************
கனவில் என்னோடு
நேரில் அவனோடு
காட்சிப் பிழைகள்
எனக்கு மட்டும்

Monday, January 18, 2016

கயல்விழி

ஈன்றபொழுதினில்
தோன்றியிருக்ககூடும்
என் அன்னைக்கு ..
கண்ணீரை மறைக்கும்
காலம் வரும் மகளுக்கென்று
யாரும் அறியாமலே
வைத்து விட்டாள் எனக்கொரு
பெயர்
"கயல்விழி"

Sunday, January 10, 2016

மாமோவ் நீ வேணும்


மடிமேல் நானுறங்க
வேணும்
மணமேடை கொடுங்க
மாமா
மார்மேல் உம்மை
சுமக்க
மார்க்கமும் அது தான்
மாமா
தொங்க தொங்க
தாலி வேணும்
தோள் மீது
இடமும் வேணும்
தொட்டிலுக்கு
சொல்ல வேணும்
சொந்தமா
நீரே வேணும்.....!!