Wednesday, April 29, 2015

கவிஞர் பாரதிதாசன் ஜனன தினம்


கவிஞர் பாரதிதாசன் ஜனன தினம்
தமிழுக்கு அமுதென்று
பெயரை போல
கவிஞனே உனக்கு தமிழென்று
பெயர் தான் .

நாவிற்கு தமிழ் சுவையும்
நாசிற்கு தமிழ்மணமும்
செவிகளுக்கு தமிழிசையும்
விழிகளுக்கு தமிழ் உருவமென
உணர வைத்தவன் நீ ..!!

உணர்வில் மட்டுமே நடமாடிய
தமிழை உயிர்மூச்சாக்கிய
உத்தமனே
உச்சரிப்பதில்லை உன் பெயரை
சுப்புரத்னா என
காரணம்
நீ இன்று பார்போற்றும் பாரதிதாசன் ..!!!

நீ ஜனித்தாய் மறைந்தாய்
நாம்
மறக்கவில்லை எம்மில் நீ
மறையவில்லை ..
எமக்குள் வாழ்கின்றாய்
உன்னை
போற்றுகின்றோம் இன்று
தமிழ் அன்னையின் தத்துப் பிள்ளையாய் ..!!!!!

இன்று தமிழோடு கலந்து எனக்குள் உயிருக்கு மேலாய் வாழும் கவிஞர் பாரதி தாசனின் ஜனன தினம் ..!!

Friday, April 17, 2015

வாழ்த்துகளுக்கு ஓர் வாழ்த்துக் கவி

வாழ்த்துகளுக்கு ஓர் வாழ்த்துக் கவி
கற்பனைக்கு உயிர்கொடுத்து
காற்றிலே நடந்தவள் ..
கனவு மட்டும் நிஜமென்று
காரிருளோடு வாழ்ந்தவள் ..

கண்ணீரில் தினம் குளித்து
கவிதைகள் வடித்தவள்
கடவுளான பெற்றோரை
கல்லென சபித்தவள் ..

பிறந்தது கொடுமையென்று
புலம்பி தினம் திரிந்தவள் ..
பூத்ததென்ன இன்று
புத்தம் புது பூ என்று..!!

வான்தொட்ட வாழ்த்துக்களா .?
வையம் போற்றும் ஆசிகளா .?

வாழ்வில் முதல் முறை
வாழ்த்தில் பூரித்தேன்
பிறப்பின் பெருமைதனை
வார்த்தையில் யூகித்தேன் ..

கடந்து சென்ற நள்ளிரவு
கனவில்லை உணர்ந்திட்டேன்
முத்தான ஓர் வாழ்த்தால்
முழு அன்பை புரிந்திட்டேன் ..

ஒன்றென்றால் ஒன்றல்ல ஓராயிரம்
வாழ்த்தின்று
நன்றி என்று முடித்துக்கொள்ள
நாவிற்கும் தயக்கம் இன்று...

உறவென்று உங்களைச் சொல்லி
பிரிந்து செல்ல மனமில்லை ..
உயிராக கலந்திடுங்கள் 
உலகில் நான் வாழும் வரை ....!!!!!!!!!


இன்று..என்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ....இக்கவி உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் ..

Thursday, April 16, 2015

சிரிப்பு கலைஞனின் ஜனன தினம்


சிரிப்பு கலைஞனின் ஜனன  தினம்
குறுகிய மீசையும்
குழந்தை மனமும்
குறும்பாய் ஒருவன் இவன்
கோடியில் ஒருவன் ..

இவன் முன் சினத்து நின்றவர்
எவருமில்லை
சிரிக்காமல் சென்றவர் மனிதர்
இல்லை ...

மகிழ்விக்க தெரிந்ததால்
மனிதனானான்
மக்களின் மனதில்
மன்னனான் ..

கள்ளம் இல்லா கலைஞன் என்று
காண்போர் போற்றி மகிழ்ந்தாலும்
கண்ணீரில் குளித்த இவன் வாழ்வு
கண்டவர் இல்லை பூமிதனில் .

சிரிக்க மறந்த இவனால் தான்
சிரிக்க கற்றோம் நாம் இங்கே
பிறக்க வேண்டும் மறுமுறையும்
சிறக்க வாழ்க்கை சிரிப்பினிலே ..!!!!


இன்று சிரிப்பு கவிஞனின் ஜனன தினம் .

Friday, April 10, 2015

புரட்சி தமிழர் நாங்கள்

புரட்சி தமிழர் நாங்கள்
எவன் மடிந்தால் எனகென்ன
மண்ணோடு மக்கிப்போனால் தான் என்ன .?
வரவுண்டா எமக்கு வாதிட்டு நிற்பதற்கு .?

இனவெறியும் இல்லை
உயிர் எடுத்ததில் தவறும் இல்லை
தற்செயலாய் நடந்ததற்கு
காக்கிச் சட்டை பொறுப்பும் இல்லை
இது எம் அரசாங்கம் -எதிர்த்தால்
நீ நாசம் .

இருப்பினும்

கரன்சி கிடைக்கும் என்றால்
சொல்லுங்கள்
கரப்பான் பூச்சிக்கும் கண்ணீர் வடிப்போம்
இல்லையெனில் ..

புரட்சியின் எழுச்சியை வரிகளில்
புகுத்தி விட்டு
போத்தி படுத்துகொள்வோம்

புகழாரம் வேண்டும் என்றால்
இன்று மட்டும் போர்க்கொடி ஏந்தி நிப்போம் .
பூரித்து போவார் எம்மவர்
புரட்சி தமிழர் என .!!!!

Wednesday, April 8, 2015

நினைத்து நினைத்து பார்த்தேன்

நினைத்து நினைத்து பார்த்தேன்
பள்ளிப் பருவத்தில்
துள்ளி விளையாடியதையும்
கல்லூரிக் காலத்தில் கரம் கோர்த்து
நடந்ததையும்
எண்ணிக்கொண்டே நகர்கின்றது
நாட்கள் ...

முறைப்பெண் இல்லையென்ற போதும்
முறைசொல்லி நீ அழைத்த கணங்களை
மறுபடி வேண்டி தவம் கிடக்கின்றன
செவிகள் ...

கடக்கரை மணலில் வரைந்திட்ட
காதல் சின்னம் தனை
அலை அழித்திட்ட போது
சிவந்திட்ட உன் முகம் இன்றும்
சிறைப்பட்டு கிடக்கின்றது எனக்குள் ..

அறியாத வயதில் பிறந்திட்ட காதல்
பிரிகின்ற போது புரிந்ததால்
குறை சொல்வேன் யாரை ..?

மலர்ந்த காதலை மறந்துவிட்டதாய்
நீ எண்ணக்கூடும்
அல்லது என்னையும் மறந்திருப்பாய் ....
ஆனால்

என் நினைவுகள் நிழலாக உன்னை மட்டுமே தொடர்ந்திடும் ....!!!

Tuesday, April 7, 2015

பெண்ணெனும் பேரழகி

பெண்ணெனும் பேரழகி
கொட்டிடும் மழையில்
சொட்டச் சொட்ட நனைந்தாள்
கட்டிளம் பெண்ணொருத்தி .
வெட்டிடும் மின்னல்
சட்டென சிரித்தது ..

மெல்லிடை பெண்ணிவள்
மேனி நனைக்காதே
கோபத்தில் குமுறினான்
இடியெனும் அரசன் ...

வெண்பால் கொண்டு
வடித்திட்ட பெண்ணை
வருடாமல் விடுவேனோ
வழிகையில் மழைநீர் விளித்தது ஏக்கத்தில் ..

வல்லினமா இவள் மெல்லினமா
வளைந்தோடும் நதியினமா .?
புலவர்களும் புலம்பிக் கொண்டனர்..

வெண்ணிலா தனிமையில்
கண்ணீர் விட்டது
பெண்ணிலா இவள் வருகையால்
என் முகம் மறந்தனர் கவிஞர் என .!!!!

Monday, April 6, 2015

இது என்ன சொர்கப்புரியா

இது என்ன  சொர்கப்புரியா -
இரவை பகலாக்கும் மின்
விளக்குகள்
இரத்தத்தை குடிக்கும் இயந்திரங்கள்.

சுவாசத்தையும் ரணமாக்கும் புகை மூட்டங்கள்
வானையும் கிழிக்கும் வாகன
இரைச்சல்கள் .

இவைகளை தாண்டிய ஓர்
பயணம் .

பச்சை பசேலென பறந்து விரிந்த
வயல்வெளிகள்
சில்லெனi வீசும் தென்றல்
சிரிக்கும் நீர் வீழ்ச்சிகள்.

பூத்துக் குலுங்கும் மலர்கள்
புது ராகம் பாடும் பறவைகள் .
இருமருங்கிலும் மரங்கள்
ஈடு இணை இல்லா செல்வங்கள்.

அன்பை பொழியும் மனிதர்கள்
அழகை கொட்டும் இயற்கை
அருகில் உலாவும் விலங்குகள் .

அம்மம்மாம்மா ...
உலக அதிசயங்களின் ஒட்டுமொத்த
உறைவிடம் இதுவல்லவோ ...


காண்பதெல்லாம் கனவா
கண்களுக்கே சந்தேகம்
கால் பதித்தது சொர்கத்திலா .?
கன்னி எனக்குள்ளும் சந்தேகம் ...!!

சாதிக்க துணிந்து விட்டோம்

சாதிக்க துணிந்து விட்டோம் - கயல்
சாதிக்க துணிந்து விட்டோம் -கயல்

மலையும் மண் புழுவாகும்
ஆழ்கடல் நீர் அரைசாண் ஆகும் .
வானம் குடை பிடிக்கும்
புயலும் பூ தூவிச் செல்லும் .

தடைகளை உடையாக்கி
தன்மானத்தை உணவாக்கி
சாதிக்க துணிந்து விட்டோம்
இனி போதிமரம் தேவை இல்லை

போர் முரசின்றி
உயிர் பறிக்கும் யுத்தமின்றி
உலகை வெல்ல போகின்றோம்
உண்மை எனும் வாள் ஏந்தி .

அகிம்சை இல்லை
இங்கு
இம்சையும் இல்லை
எதிர்த்து நிற்கும் திறனும்
எழுதுகோலையும் தவிர
எமக்கென்று எதுவும் இல்லை .

இருப்பினும்
மாற்றுவோம்
எழுத்தினால்
தலைஎழுத்தை மட்டும் அல்ல
தரணியையும் ..

ஆம் நாம் எழுத்தாளர்கள் .!!!!!

Sunday, April 5, 2015

மனிதத்தை விலை பேசும் மாபெரும் கவிஞர்களுக்கு


பெண் பல் இளித்துச் செல்ல
இங்கு சிலர்
வால் பிடித்துச் செல்வார்
என்ன கொடுமை என்றால் இவர்கள் கவிஞர்கள் ..!!

பொய் அன்பெனும் அம்புகொண்டு
நாராக கிழித்த பின்னே
வடிகின்ற உதிரத்தில் பெண் குளிக்க
இங்குபூமாலை சூடுகின்றார் சிலர்
இவர்கள் கவிஞர்கள் ..!!

தவறென தெரிந்துகொண்டு
தாவணி பின் சென்று
தலைநிமிர்ந்து நடந்திடும் இவர்கள்
ம்ம்ம்ம் கவிஞர்கள் ..!!

காதல் இல்லா விட்டால்
கடவுளும் இல்லை
காதலிக்காவிட்டால் இங்கு எந்த
கவிஞனும் இல்லை ..

ஏமாந்து விட்டால் கோழையும்
இல்லை
ஏமாற்றி சென்றவள் பத்தினியும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் கவிஞர்களே
பொய் மட்டும் எமக்கு வாழ்க்கையில்லை
போர்க்கொடி தூக்குவதும்
பெண் பின்னால்
அலைவதும் ரசனையில்லை .

மனிதத்தை மதித்திடுங்கள்
மனித உணர்விற்கு வழிவிடுங்கள்
கவிஞனாய் வாழவெனில்
காழ்ப்புணர்வு துறந்திடுங்கள் .

தவறென தெரிந்திட்டால்
தட்டிக் கேட்க முற்படுங்கள்
தாயாக இருப்பினும்
தப்பென்று உணர்த்திடுங்கள் ...


(இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு இல்லை .அப்பிடி நடந்தால் மன்னித்து விடுங்கள் )

Friday, April 3, 2015

நட்பை உயிரென சுவாசிப்போம்

நட்பை உயிரென சுவாசிப்போம்
இரத்த சொந்தம் இருப்பதில்லை
எமக்காக இரத்தம் சிந்தும்
ஒரு உறவு.

துவண்டு துடித்து வீழ்கையில்
தோள் கொடுத்து
தூக்கி விடும் புது உறவு.

நாம்
வழி தவறி சென்றிடேல்
எம் விழி திறக்கும்
ஒரு உறவு .

முட்டி மோதி நிற்காமல் முரண்கள்
தகர்த்திடும் புது உறவு .

சாதி மதமெனும் முகத்திரையை
கிழித்து வீசும் ஒரு உறவு .

சமத்துவ வழியின் மகத்துவத்தை
கற்றுக்கொடுக்கும் புது உறவு

உயர்ந்தவர் தாழ்ந்தவர்
இங்கில்லை
குணத்தில் நண்பர்கள் ஒரு தாய் பிள்ளை .

அன்னைகள் தந்தைகள் இங்கு உண்டு
அனாதை என்று எவர் உண்டு.

நட்பால் பல தாய் அன்புண்டு
நட்பால் பல தந்தை ஆசி உண்டு


"நட்பு" என்பது நன்கொடை
நாளைய விடியலின் அருட்கொடை
நட்பை உயிரென சுவாசிப்போம் .
நட்பே உயர்வென போற்றிடுவோம்.!!!!

Wednesday, April 1, 2015

நன்றி சொல்வேன் நான் உனக்கு


நன்றி  சொல்வேன்  நான் உனக்கு


உன் வழி நாடேன் இனி
உன் நிழல் தேடேன் நான் .
உன் குரல் கேளேன் -என்றுமே
உன் மடி சேரேன் .

வஞ்சம் வைத்தாய் என்னில் நீ
வாரி அணைத்தாய் அவளை நீ
கள்ளம் இல்லா என் காதலை
வெட்டி எறிந்தாய் வெறுப்போடு நீ .

பெண்மை என்ன பொய்மையா .?
சிரித்து நடிக்கும் பொம்மையா .?
புறந்தள்ளும் ஆண்மையை
புரிந்திட முடியா பேதையா .?

பொறுமை காப்பதும் பெண்மை தான்
புயலாய் சுழல்வதும் பெண்மை தான்
உன்னை சுமந்ததும் பெண்மை தான்
உலகையே சுமப்பதும் பெண்மைதான்.

என்னை ஏளனம் செய்வதினால்
எனக்கு ஒன்றும் துன்பமில்லை
அழகு என்ற ஒன்றைவிட
எனக்குள் எந்த குறையுமில்லை .

சுயநலம் எனக்குள் வாராது
பிறர் நலம் காப்பது மாறாது

உள்ளத்தால் உனக்கு என்றும்
நன்றி சொல்வேன் - உயிரே நீ
இன்று என்னை பிரிந்ததற்கு ..!!!