Monday, November 23, 2015

ஏக்கம்


அக்கா ..நீ
கிறுக்கி கிழிக்கும்
தாள்களை
எனக்கு கொடேன்
நான்
எழுதி படிக்கிறேன்
வீட்டை பெருக்கிய சிறுமியின்
விழியின் ஏக்கத்தில்
வெக்கித்தலை குனிந்தது
என்
ஒட்டுமொத்த கவிதைகளும் ..!!

Sunday, November 22, 2015

வீர வேங்கைகளுக்கு என் வீர வணக்கங்கள்

கார்த்திகை
கடவுள்களின் மாதமாம்
ஆம்
நாத்திகன் நானும் நம்புகிறேன் .

கல்லான கடவுள்களுக்கு
நீங்கள்
கற்பூரம் காட்டுங்கள் .
கல்லறையில் வாழும்
கடவுள்களுக்கு
நான்
கண்ணீரில் அபிஷேகம்
செய்கிறேன்.

மகாபாரதத்தில் கிருஷ்ணரும்
இராமாயணத்தில் இராமரும்
கதாநாயகர்கள்
கதைகளில் படிக்கிறோம்
கடவுள் என ஏற்கிறோம் .

எம் உயிர்காக்க
தம் உயிர் நீத்த
ஈழப்போரின் வேந்தர்களை
எங்கே நாம் நினைக்கிறோம் ?

பொன்னுக்கும் பெண்ணுக்கும்
போராடி இருந்தால் ஒருவேளை
காவியமாகி இருக்கலாம் -இவர்களின்
தியாகங்களும்.

தமிழுக்கும்
தாய் மண்ணுக்கும் என்றால்
தயக்கம் தான்
தமிழனுக்கும் .

துயில்கொள்ளும் நீங்கள்
விழித்தெழுவீர் -எம் துயர் நீக்கி
தொலைந்த உரிமை வெல்வீர் .

நன்றி கெட்டோர் மறக்கட்டும்
வீர மறவர் மட்டும் உம்மை நினைக்கட்டும் ....!


விதையாய் வீழ்ந்த உறவுகளுக்கு என வீர வணக்கங்கள் .

Sunday, November 15, 2015

அரும்புகள்


மனங்களை வருடிடும்
நந்தவனங்கள் .
மாயம் செய்திடும்
வானவில்கள் .

கடவுள் செதுக்கிய
சிற்பங்கள்
கண்சிமிட்டும்
ஓவியங்கள் .

தோகை இல்லா
வண்ண மயில்கள் .
சோகம் தீர்க்கும்
செல்லக்குயில்கள்.

துள்ளி நடந்திடும்
புள்ளி மான்கள்.
மின்னிச் சிரித்திடும்
விண்மீன்கள் .

பாலினை மிஞ்சிய
வெள்ளை மனங்கள்
பகைவருக்கும் உதவிடும்
நல்ல குணங்கள் .

அழகிய குடும்பத்தின்
ஒளி விளக்குகள்
குழந்தையென வளர்ந்திடும்
மென் அரும்புகள்

Tuesday, November 3, 2015

காதல் போதையில் நான்

காதல் போதையில் நான் --கயல்விழி
கொடுப்பதில் கர்ணனாய்
இருந்த போதும் -என்னிடம்
கஞ்சத்தனம் செய்யும் உன் பார்வைக்காய் காத்திருக்கின்றது
விழிகள் .

இளையராஜாவும் எம்.எஸ்.வியும்
இணைந்தே என்னுள் இசையமைக்கின்றார்கள்
என்னை நீ கடந்துசெல்லும்
இரண்டொரு நொடிகளில் .

உன் தினக்குறிப்பேட்டை
தினமும் முத்தமிட வைக்கிறது எச்சில் தடவப்பட்ட
பக்கங்கள் .

காதறுத்த உன் செருப்பும்
என் மஞ்சத்தோடு ஒட்டிக்கிடக்கிறது
பரதனின் ஆட்சி பீடத்தில்
ராமரின் அடையாளமாய் .

அதிகாலை பனியின் இதமான சுகத்தை மிஞ்சி என் கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது
குழந்தைக்கென நீ கொடுத்த
பறக்கும் முத்தம் .

தலையணைகள் தன்னை தழுவுதலுக்கு தடைவிதித்துவிட்டன
கனவில் உன் சில்மிஷங்கள்
அத்துமீறிவிட்டனவாம் .

உன் அன்னையின் கருவறை மேல்
பொறாமைப்பட்டுக்கொள்கிறது என்
இதயம்
உன்னை எனக்கு முதல் சுமந்துவிட்டதால் ...!! !

Sunday, November 1, 2015

காணாமல் போனவர்கள் எல்லாம் கல்லறையிலா

 காணாமல் போனவர்கள் எல்லாம் கல்லறையிலா - கயல்விழி


கடலில் கலந்த உடல்களுக்கும்
காற்றில் உலவும் உயிர்களுக்கும்
கண்ணீர் அஞ்சலியாம்-இதற்கு
---காணாமல் போனோர் என்னும் கண்துடைப்பாம் .!

வீதியில் கைதானோருக்கும்
வெள்ளை வேனில் கடத்தப்பட்டோருக்கும்
துக்கம் அனுஷ்டிப்பாம் -இவர்களுக்கு
-----காணாமல் போனோர் என்னும் புனைப்பெயராம் .

தந்தையை தேடும் குழந்தையும்
தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .

சீதுவையில் நினைவு தூபியாம்
சிறைபிடிக்கப்பட்டோருக்கு .
காணாமல் போனோர் என்றால்
கல்லறை ஏன் சொல்லுங்களேன் .?

கற்பழிக்கப்பட்டார்களா -இல்லை உடல் கருகி மண்ணில் வீழ்ந்தார்களா .?
பாழும் கிணற்றில் போட்டீர்களா -இல்லை
உடலை
பாதி அறுத்துத்திண்டீர்களா.?

துடிக்கவைத்து ரசித்தீர்களா -இல்லை
சுடு நீரில்
அவித்தீர்களா .?

எம் வினாக்களுக்கு
விடையில்லை
வேதனைகளுக்கு
முடிவில்லை .

நெஞ்சம் பிளந்திட அழுகின்றோம் -அவர்கள்
நினைவுகள் வதைத்திட துடிக்கின்றோம்
விழி நீரில் மாலை தொடுக்கின்றோம்
-எம்மவர்
மீண்டு வருவார் என்று
வாழ்கின்றோம்.

அண்ணன் தம்பியரே கேளுங்களேன்
எம் அவலத்தை உலகிற்கு எடுத்து
செல்லுங்களேன் .
-----காணாமல் போன உயிர்கள் எல்லாம்
கல்லறையில் உறங்குதென்று
சொல்லுங்களேன்.

கொடும் யுத்தத்தால் அழிந்த
உயிர்கள் போக -மிகுதி
கப்பத்தால் அழிவதை பாருங்களேன் .

Friday, October 30, 2015

மாத இறுதி


இரவு உணவு
வாங்கி வா அக்கா
தொலைபேசியில் தங்கையின்
கெஞ்சலுக்கு ம்ம்
கொட்டியவளாய்
சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தேன்
அருகில் ஒருவரும் அதையே
செய்துகொண்டிருந்தார் .
இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
நான் மாத இறுதியில்
அவர் தினமும் ...!!

Thursday, October 29, 2015

பெண் சுதந்திரம் வேண்டும்


பெண் சுதந்திரம்  வேண்டும்
அவசர அவசரமாய்
கண்விழித்து
காலை எட்டு மணிக்கே
தலைக்குளித்து
வேலைக்காரன் வைத்த
ஓட்ஸ் யும் பூஸ்டையும்
விழுங்கி விட்டு
முட்டிக்கு மேல்
தொப்புளுக்கு கீழ்
குட்டை பாவடையும்
சல்லடையாய் சட்டையும்
அணிந்து
வீதியில் செல்லுகையில்
சீண்டிப்பார்க்கும் ஆண்களிடம்
இருந்து
கலிகால கண்ணகிகள் நாங்கள்
கேட்பது
"பெண் சுதந்திரம் "

(சிலருக்கு மட்டும் )

Thursday, October 22, 2015

நவராத்திரியும் பெத்திமாவும்

நவராத்திரியும் பெத்திமாவும் --கயல்விழி
நாத்திகம் பேசாதே இன்று
நவராத்திரி பண்டிகை
பட்டையோடு பவ்வியமாய் (இது போன்ற நாட்களில் மட்டும் )
சித்தி .

கடவுளை காலைக்கடன்
முடிக்க விடுங்க
நாத்திகம் பேச மாட்டேன்
அரைத்தூக்கத்தில் நான் .

தேவார திருப்புகழ்
பின்னணியில் ஒலிக்க
எழுந்திரடி முதேவி ..
மந்திரம் பாடும் அக்கா

ஸ்நானம் செய்துகொள்
பிடித்த பினியெனும் தீரும்
பதினெட்டு வருடம் பல்லுக்கு
பற்பொடி காட்டாத பாட்டி .

குளிருது மா கொஞ்சம்
உறங்க விடேன்
போர்வைக்குள் புகுந்துக்கொண்டு
கெஞ்சி கேட்கும் தம்பி .

கோயிலுக்கு போகணும்
சீக்கிரம் சீக்கிரம்
சக்கரை பொங்கலுக்கும்
கடலை சுண்டலுக்கும்
துடிக்கும் நாவோடு தாத்தா .

கல்வியோ செல்வமோ வீரமோ
எதுவும் கிடைக்காததால்
கடவுளை சபித்தபடி என் வீட்டு
பெத்திமா.(கிளி )

Wednesday, October 21, 2015

செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து

செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து --கயல்விழி
வெண்மதியை மிஞ்சும் இவள் முகம்
வெண்பஞ்சை மிஞ்சும் இவள் மனம்
தேனின் பிறப்பிடம் இவள் மொழி
தேவதை இவள் எங்கள் கனிமொழி .

சிரிக்கும் பட்டாம்பூச்சி இவள்
தெய்வம் தந்த செல்வமிவள்
எட்டி நடக்கும் புது மலர்
பூமியில் வாழும் நட்சத்திரம் .

கன்னக்குழிகள் கூட கதை பேசும்
கண்சிமிட்டி இவள் சிரிக்கையிலே
மென் விரல்கள் கூட நடனமிடும்
கைவீசி இவள் நடக்கையிலே .

தனிமை இவளுக்கு பிடிக்காது
தங்க நகையும் கூட பிடிக்காது
மஞ்சள் வெயில் தினம் ரசிப்பாள்
காரணம்
அவளை போல் அது அழகு என்பாள் .

கடவுள் கண்ணை குத்தும் என்பாள்
கண்ணடித்தே களவு செய்வாள்
கோபமும் குறும்பும்l சோதரர்கள்
கொஞ்சலும் கெஞ்சலும் -எம்
ஆயுதங்கள் .

சித்தி மிட்டாய் வேணும் என்று
செல்லமாய் தினமும் அடம்பிடிப்பாள்
உனக்கு மட்டுமென கொடுத்தாலும்
பகிர்ந்து உண்டே அகமகிழ்வாள் .

அக்கா பெற்ற மழலை இவள் -எனக்கு ஆறுதல் தருகின்ற அன்னையிவள் .
வாழ்ந்திட வேண்டும் இவள் நூறாண்டு
வாழ்த்தி மகிழ்ந்திட வாருங்களேன் .!!

Monday, October 19, 2015

கற்பழிப்பு விருட்சங்கள் வளர்கின்றது

கற்பழிப்பு விருட்சங்கள் வளர்கின்றது - கயல்விழி
பால்குடிக்கும் சிசுவிடம்
பாவி எதை தேடினாய்
உதிரம் உறுப்புகளாகி வெறும் ஐந்தே வருடத்தில்
இருக்கும் என்று நினைத்தாயா -உன்
இச்சை போக்கும் இடமொன்று .?

பட்டாம்பூச்சி மேனிதனில்
பதிகையிலே உன் பற்கள்
நெருடவில்லையா உன்மனம்
ருசிப்பது சிறு உயிரை என்று.

சிரிக்கும் மலரின் செவ்விதழ்கள்
கதறும் நொடியில் எனும்
கரையவில்லையா கண்கெட்டவனே
உன் கல் மனது .?

பிஞ்சு விரல்கள் உன்னிடம் கெஞ்சிடும் போதினில்
நெஞ்சினில் ஈரம்
கசியவில்லையா கயவனே .?

எச்சில் வடிக்கும் நாயே
இச்சை எதற்கு மழலை மேல்
உச்சம் உனக்கென்றால்
உதவி எடு உன் கரங்களிடம் .

பச்சிளம் குழந்தைகளும்
பாலியல் பலாத்காரமும்
எழுதிக்கொண்டே இருக்கின்றோம்
இன்று வரை முடியவில்லை
முடிவும் இல்லை .

கற்பில் பெண் குழந்தை என்றால்
காவல் வேண்டும் கருவறைக்கும்
காத்துக்கொள்
கள்ளிச்செடிகள் காய்கின்றனவாம்
கற்பழிப்புகள் விருட்சம் ஆனதால் .!!

(இது 2015.9.14 அன்று உயிர் குடிக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் சேயா எனும் மலரை கசக்கியவனுக்கு எழுதியது .)

Friday, October 16, 2015

இவளும் எழுதுகோலும்

இவளும் எழுதுகோலும் --கயல்விழி
இருளை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த மின்விளக்கின் அடியில்
அமைதியாய் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தது
தினக்குறிப்பேடு .

உதிரம் எனும் மை தோய்ந்த சில காகித துண்டுகள்
கற்பழிக்கப்பட்ட கன்னிகளை போல
கசக்கி வீசப்பட்டிருந்தன குப்பைத்தொட்டிக்குள் .

சுவாசிக்கத் திணறிய
மின்விசிறியின் கடைசி ஆசையை சொல்ல முடியாமல் இறுகிப்போனது டக் டக் ஓசையுடன் .

அறையின் மூலையில் ஆங்காங்கே
அரண்மனை அமைத்து
அரசாட்சி செய்தது கரையான்கள் .

அழையா விருந்தாளியாய்
அடிக்கடி வந்து போனது மின்மினிகள் .

விழிகள் வேண்டிக்கொண்டது
இமைகள் இரண்டும் இன்றாவது
இணைதல்
இன்பமென்று .

எதையும் நோக்காத இவளின் உணர்வுகளுக்கு
உதிரத்தால் உயிர்கொடுத்துகொண்டிருந்தது
எழுதுகோல் .!!

அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்

அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெற்று
குற்றம் உன்மேல் எனும்
சுத்தமானவளே
--உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!

காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும்
கண்பட்டு வீழ்ந்தேன் என்று
ஊருக்கே திட்டிவிட்டு
கண் திருஷ்டி கழிப்பவளே
-- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .!

தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும்
தலை துடைத்து
எண்ணெய் தேய்க்க
--இன்னும் சலிக்கவில்லையா அம்மா .!

விக்கினாலும் தும்மினாலும்
நினைப்பது என் பிள்ளை என்று
நெகிழ்கின்றாயே அம்மா

நினைத்துக்கொள்கின்றேன்

இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான்
அன்னையாக ...!!

Friday, September 18, 2015

அழகின் அழகு கவி இவளல்லவோ

அழகின் அழகு கவி  இவளல்லவோ
மின்னலை செதுக்கி சிலையென
வடித்தானோ உன்னை .!
மிளிர்கின்றதே மேனி
பொன்னென பெண்ணே ..

நட்சத்திரங்கள் பறித்து
நீலக்கடலினில் நீந்த விட்டவன்
ஆச்சரியம் கொண்டானோ -அது
அலையில்லா உன்
விழியென கண்டு .!

தேனிலும் இனியது இல்லை என்ற
தேனீக்களின் இறுமாப்பு உடைந்ததோ
தேவதை உந்தன் இதழ் தனை
சுவைத்ததால் .!

வெண்ணிலவிற்கு பால் சேர்த்து
மெல்லிய வெண் மணி செய்து
சிற்பிகள் செதுக்கிய மென் பற்கள்
சித்திரமே உன் வாயில்
சிரிப்பதுவோ .!

அந்தியில் கதிரவன்
சென்நிறமெடுத்து
அழகிற்கு வானவில்லை அதில் குழைத்து
கண்ணே உன்கன்னத்தை
செதுக்கியவன்
ரசனையில் பிரம்மனை மிஞ்சியவன் .

கறுப்பு தோகைமயில் கண்டதில்லை
பெண்ணே உன் கூந்தல் தீர்த்தது
அந்த குறை .

அரவத்தை மயக்கிடும் மகுடி இசையும்
அகிலத்தை மயக்கிடும் மூங்கிலிசையும்
வெக்கப்பட்டு நின்றது .
கொஞ்சிப்பேசும் வெண்தாமரை உன் குரலிசையின் முன் .

நடைபயிலும் கொடி நீயென வியந்த விருட்சங்கள்
வெண்சாமரம் வீசியதோ
தென்றலின் விரல்களால் .

கம்பன் காலத்தில் நீ இல்லை
போலும்
அதனால் தான் வார்த்தைகளில் அடக்கி விட்டான் பெண்அழகை .
இன்று
இருந்திருந்தால் எழுதியிருப்பான்
இவள் அழகிற்கு
இணைவைக்க எதுவுமே இல்லை
இவ்வுலகிலென .!!!!!!!

Wednesday, September 16, 2015

புனிதமான பெண்மைக்கு புத்திமதிகள் சில

புனிதமான பெண்மைக்கு புத்திமதிகள் சில
செந்தமிழுக்கு இல்லா உரிமை
வெண்மேனிக்கு
கிடைக்கும் என்றால்
செல்லாதே பெண்ணே -அங்கு
சீரழிப்பார் உன்னை .

பொட்டுக்கும் தாலிக்கும்
பொருந்தாத இடமெனில்
புறக்கணித்து விடு பெண்ணே-அங்கு
பெருமை இழப்பாய் பெண்மையின் .

விழிநோக்கா ஆண்மையின்
விழி பார்க்க நேர்கையில்
விலகிசெல் பெண்ணே
அங்கு -பாதுகாக்கப்படும் உன் பத்தினித்துவம்.

ஆடம்பர வாழ்வை விரும்பாதே
பெண்ணே
அழிந்திட கூடும் உன் அடக்கத்தின்
சிறப்பு .

பெற்றவர் முதியோர் என வெறுக்காதே பெண்ணே
இரண்டு பெற்ற பின் தளர்ந்திடுவாய்
மறக்காதே கண்ணே .

பணம் மட்டும் போதும் என்று
எண்ணாதே பெண்ணே.
பாசத்தையும் சேமித்திட
கற்றுக்கொள் கண்ணே ...!!!

Tuesday, September 15, 2015

ம்ம்ம் இதுவும் உண்மையே


ம்ம்ம் இதுவும் உண்மையே
வெளிச்சம் தேடும் விட்டில்பூச்சிகள்
அறிவதில்லை
விளக்கு தன் உயிர்குடிக்கும் எமன் என்று .

கர்ப்பம் சுமக்கும் சிலந்திக்கு புரிவதில்லை
குழந்தைகள் கண்திறக்கும் போதே
உணவாய் சுவைப்பது
அதன் உடலை என்று.

முளைவிடும் அரும்புகள் நினைப்பதில்லை
மலர்தல் தான்
தன் மரணம் என்று.

மனிதன் உணர்வதே இல்லை
மரணம் தான் வாழ்வின்
முடிவுரை என்று ..!!!

Monday, September 14, 2015

உணர்வுகளில் உருவான காதல்


உணர்வுகளில் உருவான காதல்
இமைகள் இணைய மறுக்கையில்
மயில் இறகாய் விழி வருடும் உன் ஸ்பரிசமும்

துயிலின் நடுவில் திடுக்கிடும் போது
துணையாகும் உன் சுவாசத்தின்
உஷ்ணமும்

தொலைவில் நீ இருந்தாலும்
என் நினைவில்
தினம் கிடைகின்றது உயிரே .

நிமிஷங்கள் நகர்ந்து
வருசங்கள் ஆனபோதும்
நெஞ்சுக்குள் இன்னும் இனிக்கின்றது
முதல் சந்திப்பின் மௌனம் .

என்னை
பித்துப்பிடிக்க வைத்து -உன் பின்னே அலையவைத்த கனங்கள்
கடந்த காலம் என்பதை மறந்துவிடுகின்றது நிகழ்காலம் .

விரல்பிடித்து நடப்பதாய் கற்பனை
செய்து
விடிந்ததை மறந்த நாட்கள் .

வேதனை மறக்கவென
என் கனவில் நீ
தலைகோதி தோள்சாய்த்த இரவுகள்

அதிசயம்
உணர்வுகளில் மட்டும் உருவான
காதல்
உயிர் வாழ்கின்றது உலகில் ...!!!

Sunday, September 13, 2015

மங்கைக்குள் காதல்

மங்கைக்குள் காதல் -கயல்விழி
நீரினை தொலைத்த மீன்களாய்
இரு இமைகளின் நடுவே துடித்துக்கொண்டிருந்தது கருவிழிகள் .

சிறைபிடிக்கப்பட்ட காற்றாய்
சிக்கித்தவித்துக்கொண்டிருந்தது
சுவாசம் .

சூரியனை தோற்கடித்து வெப்பத்தை கடனாய் வழங்கிக்கொண்டிருந்தது உடல் .

வானவில்லை பிடித்து வந்து
உடைக்காமல் உணவாக்கி
வர்ணம்தீட்டிகொண்டிருந்தது
கன்னங்கள் .

இடியின் சத்தத்தையும் மின்னலின் வேகத்தையும் மிஞ்சிவிட்டிருந்தது
இதயத்தின் லப்டப் ஒலி.

பாலைவனத்தின் வறட்சியை சிறிதாக்கி
வறண்டுகொண்டிருந்தது நாவு .

அலைகளின் ஆர்பரிப்பை தனக்குள்
அடக்கி
தவித்துக்கொண்டிருந்தது இதழ்கள் .

இவை எதுவும் அறியாது
தடம்புரண்ட ரயிலாய் தடுமாறிய மனதிற்கு
மௌனம் சொன்னது
மங்கைக்குள் காதல் ..!!!!

Friday, September 11, 2015

காதல் மழையோடு ஒரு கவிப்பயணம்

காதல் மழையோடு ஒரு கவிப்பயணம்
அங்காங்கே தொடாதே
புல்லரித்து போகின்றதே உடல்
சில்லென்ற உன் தழுவலில் .

உச்சி முதல் பாதம் வரை
உரசாதே .
உஷ்ணத்தின் பாஷைகள்
உறங்கி விடுகின்றது
நொடிப்பொழுதில் .

மோசக்காரனடா நீ .!
மொத்த முத்தம் உனக்கே
வேண்டும் என்று
கார்முகிலாகி இதழ்களை
சுவைக்கின்றாயே .!

துளி துளியாய் துள்ளி வந்து
சீண்டுகின்றாயா என்னை -இரு நானும் தூய்மையாகிகொள்கின்றேன் உன் தீண்டலில் .

தடுத்திட தடுத்திட மனம் நினைக்க
தனைமறந்த கரங்கள் மட்டும்
ஏந்திக்கொள்வது உன்னை -தன்
ஏக்கம் தவிர்பதற்கோ .

சிலர் உன்னை வஞ்சிக்கின்றனர்
நாசகாரன் என்று .
பலர் உன்னை வரவேற்கின்றனர்
கொடைவள்ளல் நீ
என்று.
நான் உன்னை கொஞ்சிக்கொண்டிருக்கின்றேன்
என் கள்வன் மழை என்று.

அதிகாலையில் வந்து இம்சிக்காதே
அந்தரங்க நேரமாம் அந்திப்பொழுதில்
வந்துவிடு -உன்னை
ஆரத்தழுவி அணைத்துகொள்கின்றேன் என்னோடு .....!!!

முண்டாசு கவிஞன் பாரதி


முண்டாசு கவிஞன் பாரதி
முண்டாசு கவிஞனின்
பட்டாசு வார்த்தைகளில்
துண்டாட பட்டவள் நான் .!

அடுப்படி அடக்கு முறைக்கு
செருப்படி கொடுத்திட துடித்த
முருக்குமீசைக்கு
தலை வணங்கும் சின்னப்பெண் நான் .!

பெண் என்றால் பொம்மையல்ல
பூமிக்கு வந்த புதுமையென
எடுத்துரைத்த
பொக்கிஷ கவிஞனின் அடிமை நான் .

ஏளனம் செய்யப்பட்டும்
எரித்திடும் வார்த்தைகள் வீசப்பட்டும் .
தளராத தமிழ் கவியின் தத்துப்பிள்ளை நான் .

நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த நடை
வீரம் பேசும் விரல்கள்
வியக்க வைத்த மனிதன் .

குழந்தைகள் குதுகலிக்கும்
இவன் கவிக்கு குயில்களும் வாயசைக்கும் .
மூங்கில்கள் இசைகொடுக்க
இவன் தமிழின் முன்னால்
வார்த்தைகள் நாணிக்கொள்ளும் .

எட்டயபுரம் தந்த முத்து
புரட்சியில் இவன் எங்கள் சொத்து
தேடினான் புதுமைப்பெண்ணை
நன்றி நவில்கின்றேன் அவன் கண்ட
பெண்ணாய் .!!!

Sunday, September 6, 2015

பிரபஞ்சமும் நாமும்

பிரபஞ்சமும் நாமும் --கயல்விழி
வேர்வையை துடைத்து சற்று ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டான் கதிரவன் .

ஊளையிடும் நாய்கள் உறங்க விடாமல் தடுத்துக்கொண்டு இருந்தன அமைதியை .

இருளை கிழித்து பதுங்க இடம்தேடி அலைந்தது
மின்மினிகள்.

இயற்கையின் மணம் மறைந்து
இரத்த வாடை பரவியது .
மங்கிய ஒளியில் பூனை எலியை
வேட்டையாடிக்கொண்டு இருந்தது .

வண்டுகளின் முனகல்களும்
ஆந்தையின் அலறலும்
இரவிற்கு இசையமைத்துகொண்டு
இருந்தது .

முழுமதியும் அவள் முகத்தை முக்கால்வாசிக்கு மேல் மறைத்துக்கொண்டாள்
மேகத்திற்குள் .

விடியலுக்குள் கடப்பதென கரையை
அடித்துக்கொண்டு இருந்தன
அலைகள் .

இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும்
இரவுப்பொழுதில்
எதுவும் செய்யாத மனிதன் மற்றும்
பிதற்றிக்கொண்டு இருந்தான்
பிரபஞ்சத்தின் முடிவு இதென்று ..!!!

Tuesday, August 25, 2015

உண்மையான அழகு


தினம் ஒரு ஆடையும்
வித வித உணவும்
வெட்டி பந்தாவிற்கு அலங்காரங்களும்
என்று அலையும்
பணக்காரர்களை விட
அழுக்கான ஆடையுடன்
அன்றாடம் அரைவயிறு உணவிற்காய்
கரம் ஏந்தும் யாசகர்கள்
அழகாய் தெரிகின்றார்கள்
அன்பை தேடும்
என் விழிகளுக்கு ..

Thursday, August 6, 2015

அழிவை நாடும் பெண்களும் சிதைந்து போகும் புனிதமும்

அழிவை நாடும் பெண்களும் சிதைந்து போகும் புனிதமும் --கயல்விழி
தாய் தந்தை அணைப்பிற்கு
கண்ணீரில் விடைகொடுத்து .
அண்ணன் தம்பி நண்பர்க்கும்
தவிப்போடு பயணம் சொல்லி .

தாரமாய் வந்தவளை பார்போற்ற வேண்டுமென்று .
துணிகின்றான் தொழில் தேடி
தொலைதூரம் செல்வதற்கு .

கடல் கடந்து சென்றவன்
கண்ணீரில் குளிக்கின்றான் .
பாலைவன வெயில் தனில்
புழுவாக துடிக்கின்றான்.

உதிரம் உருகி வேர்வையாக
பணத்திற்காய் உழைக்கின்றான் .
துனையாளின் நினைப்போடு
காலத்தை ஜெயிக்கின்றான் .

கட்டு கட்டாய் காசு வர கணவனை அவள் மறக்கின்றாள் .
காமமோகம் தலைக்கேற
களியாட்டம் நடத்துறாள்

கட்டியவன் நம்பிக்கையை
பொடி பொடியாய் உடைக்கின்றாள்
பெண்மையின் புனிதத்தை
குழிதோண்டி புதைக்கின்றாள்.

கனவோடு காதலையும்
சுமந்து நாடு வருகின்றான்
தன்
மனையாளின் நிலைகண்டு
உயிரோடு மரிக்கிறான் .

கணவன் இன்றி கர்பமாகும்
மனைவியரே கேளுங்கள் .
வேலியாய் தாலி உண்டு பயிர்
உம்மானம் காத்திடுங்கள் ..!!


(இது இன்று பல இடங்களில் நடப்பவை .கண்ணால் கண்டதும் தான்.தவறாக நிகைக்க வேண்டாம் .இவை ஒரு சில பெண்களுக்கு மட்டும் )

என்னமோ சொல்ல தோணுது


மதுவிலக்கு வேண்டும்
மதுபோத்தல் .!
மார்தட்டி நிக்குது
வெரும்போத்தல்.!

புரட்சி என்பது
பொய் பீத்தல் .!
புரிந்து கொள்ளாதோர்
எம் மக்கள் .!

மரணத்தை விலைபேசுது
மதுவாசம் .
மௌனித்து நிற்பது
வெறும் வேஷம் .!

Monday, August 3, 2015

கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன்

கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் --கயல்விழி
அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..
உயிர் குடிக்கும் கேலிகள் .

அடடடா ...
சோகம் ஏன் உங்களிடம்
சோர்வே இல்லை என் மனதிடம் .

கறுப்பான கல் கடவுள்
சிலையாகும் என்றால்
கரு இமைகள் தான்
கண்ணை பாதுகாக்கின்றது
என்றால்
என் தேகம் கறுப்பென்பதில்
கவலை ஏன் எனக்கு .!

வெண்ணிலவை அழகாக்க
இருள் வேண்டும் என்றால்
கார்மேகம் வந்தால் தான்
மழை பொழியும் என்றால்
கறுப்பாய் பிறந்ததால் ஏன் நான்
கவலை கொள்ளவேண்டும் .

வெண்கூந்தல் அழகென்றும்
வெண்விழி அழகென்றும்
வர்ணிக்காத போது
ஏன் வெக்கப்பட வேண்டும் நான்
கறுப்பாய் பிறந்ததற்கு .

கறுப்பன் ஆட்சி புரியும் போது
கறுப்பி அழகியாகும் போது
கறுப்பால் மழை பொழியும் போது
கறுப்பே மண்ணை ஆளும் போது
கருவாச்சி காவியமான போது
கயல்விழி கவியானால் என்ன ..?
நாளை கவி வரியேனும் பேசட்டும்
கறுப்பை கண்டு கலங்கவில்லை
இவள் என்று ....!!!

Sunday, August 2, 2015

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் -கயல்விழி
சின்ன சின்ன சண்டைகளும்
செல்லகோபங்களும்
விரும்பப்படும் குறும்புகளும்
வெற்றிக்கான முதல்படியும் .

துன்பத்தில் சாய
தோளும்
தோல்வியை எதிர்க்க
துணையும்
குறைவின்றி கொடுக்கும்
உறவென்றால்
நட்பே என்று நானுரைப்பேன் .

சுயநலம் என்பது இங்கில்லை
பிறர்நலன் காப்பதே இதன் கொள்கை
அழகும் அசிங்கமும் பார்ப்பதில்லை
அதனால் தான் "நட்பு "அழகென்பேன்

அறியாவயதில் தொடங்கி விடும்
அறுபது வயதிலும் தொடர்திருக்கும் .
உயிரோடு உயிராக கலந்திருக்கும்
உயிரை கொடுக்கவும் துணிந்திருக்கும்.

தாயிற்கு பின் எதுவென்றால்
தயக்கமின்றி நான் சொல்வேன் நட்பென்று..!!!


என் உயிரான நண்பர்கள் அனைவருக்கும் ஹாப்பி நண்பர்கள் டே வாழ்த்துக்கள் .

அன்புடன் என்றும் இவள் .
"உங்கள் கயல் "

Saturday, August 1, 2015

காதலித்து தோற்றுப்பார்

காதலித்து தோற்றுப்பார்--கயல்விழி
கடல் அலை நெருப்பாகும் .
கடலை வெறுப்பாகும் .
கண்ணீர் மழையாகும்
கைக்குட்டை துணையாகும் .

காதலித்து தோற்றுப்பார்..!

பீர் தேனாகும்
அதை விற்பவன் கடவுளாவான் .
சிகரட் தோழனாகும்
தோழன் எதிரியாவான் .

காதலித்து தோற்றுப்பார்..!

சி ரிப்பு எட்டாகனியாகும்.
சினம் தினம்வந்து
ஒட்டிக்கொள்ளும் .
தாயின் கண்ணீர் எரிச்சலாகும் .
தம்பியின் குறும்பு கொடுமையாகும் .

காதலித்து தோற்றுப்பார்..!

தொலைபேசி சோர்ந்து போகும்
அதை நீ
பார்த்து பார்த்தே நொந்து போவாய் .
பொழுது புலர்ந்த பின்பும்
உன்னை மட்டும் இருள் சூழும் .

காதலித்து தோற்றுப்பார்..!

கண்டி க்ராஷோடு
நேசம் கொள்வாய் .
விண்ணப்பம் அனுப்பியே
நண்பர்களை கொல்வாய்.!

காதலித்து தோற்றுப்பார் .!

தந்தை
அரக்கனாய் தெரிவார் .
தோழிகள் துரோகியாய்
தெரிவார்கள் .

காதலித்து தோற்றுப்பார் .!

பணம் நீ கண்ட பேய் என்பாய் .
காதலே பொய் என்பாய்.
காவி மட்டும் தரிக்காமல்
இன்பங்களை நீ துறப்பாய்.

காதலித்து தோற்றுப்பார்.!

வீடு நரகமாகும் .
வெறுமை நிறைந்த
மரநிழல் சுகமாகும் .
படிப்பில் பட்டங்கள் பெற்றிருந்தாலும்
மௌனம் மட்டுமே பேசும்
மொழியாகும் .!!!!!"

Friday, July 31, 2015

இல்லாதவற்றையே தேடுகின்றேன்

இல்லாதவற்றையே  தேடுகின்றேன்
ஆழ்மனத்தின் அமைதி .
அடிமை படுத்தாத அதிகாரி .

பசியால் வாடாத ஏழை.
பணத்தை விரும்பாத முதலாளி .

யாசகர் இல்லா தெருக்கள் .
ஏசியில் வாழாத அரசியல்வாதி .

பொய் சொல்லாத கணவன் .
புறம் பேசாத மனைவி .

விலைமாது இல்லாத நகரம் .
வியாபாரம் பேசாத திருமணம் .

கண்ணீரே இல்லாத விழிகள் -அதை
காட்டிக்கொடுக்காத முகம் .

சிரிக்க தெரிந்த இதழ் -வலி
சுமக்க முடிந்த இதயம் .

இப்படி இல்லாதவற்றையே தேடி விரிகின்றது -என்னிடம்
இல்லாத சிறகுகள் .!!

Tuesday, July 28, 2015

ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
இல்லை இல்லை
இது என் கண்ணீர் இல்லை .
உள்ளம் உடைத்து உணர்வுகள்
வெடித்ததால்
விழிகளின் வழியே உதிரம்
சொட்டுகின்றது .

யார் நீ என் உறவா .?
என் சாதியா .? என் மதமா .?
ஏன் வலிக்கின்றது எனக்கு .?

ஏனெலில்
நீ மனிதன் .

மதங்கள் உன்னை மலிவாக்கவில்லை
சாதி உன்னை நோக்கவே இல்லை .
இனம் மொழி எதுவும்
உனக்கு இடையூராகவில்லை .

நீ
இளைஞன்
என்பத்தி மூன்று வயதிலும்
எட்டு திசையையும்
எதிர்த்து நின்ற
இளைஞன் .

விஞ்ஞானி
ஆம் நீ
ஞானம் ஊட்டும் மெய் ஞானி .

வரிகள் உறுதியாய் தெரிகின்றது
வலிகள் உள்ளுக்குள் கொல்கின்றது

மறைந்து விட்டாயா நீ.!
பிரிந்து விட்டதா உன் உயிர் .!
கனக்கின்றது மனது
வெடிக்கின்றது இதயம் ..!

(மனங்களை வென்ற மனிதருக்கு என் கண்ணீர் அஞ்சலி .ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் .)

Sunday, July 26, 2015

செல்லமாய் சின்ன சின்ன கனவுகள்

செல்லமாய் சின்ன சின்ன கனவுகள்
கலைந்தோடும் மேகத்தால்
கூரை செய்து
வீசிடும் தென்றலால்
ஜன்னலிடு .

பட்டாம்பூச்சிகள்
நிறமெடுத்து
வீட்டுக்கு வர்ணங்கள்
பூசிவிடு .

தூரலின் சாரலில்
தொட்டில் செய்து
மின்னலின் ஒளி பிடித்து
வெளிச்சம் கொடு .

மலர்களின் இதழ்கள்
பறித்தெடுத்து
மெதுமையாய் பதுமைக்கு
மெத்தையிடு.

குளிர்கின்ற நிலவினை பெயர்த்தெடுத்து
வேர்கின்ற பொழுதெல்லாம்
விசிறிவிடு .

குயில்களின் குரலினை எடுத்து
வந்து
கொஞ்சிடும் புது மெட்டு
போட்டுகுடு .

குமரி நான் காணும் கனவிதென்று
இயற்கையின்
செவிகளில் உரைத்துவிடு .!!!

Friday, July 24, 2015

சிந்தித்து செயற்படுவீர்


சிந்தித்து செயற்படுவீர்
நீர் இல்லா இடத்தில் கிணறும்
நிலம் இல்லா இடத்தில் வீடும்
நிச்சயம் தருவாராம்
கூச்சல் போடுறார்.
கூட்டம் கூட்டுறார்.

மின்மினி ஒளி கிடைக்காது
மின்சாரம் தருவாராம் .
பள்ளிக்கூடமே இல்லா ஊருக்கு
இலவசகல்வி கொடுப்பாராம் .

மது ஒழிப்பு அலப்பரைகள்
மணிக்கு ஒரு மது போத்தல் .
ஓட்டுக்கு ஐநூறு
லஞ்ச ஊழல் அழிப்பாராம் .

பசப்புக்காய் மரக்கன்று
பாதையோரம் நட்டுவைப்பார்
பத்திரிகை தலைப்புகளில் தன்
முகத்தை பதிய வைப்பார் .

பலன்தரும் வனங்களை பணத்திற்காய் விற்றுடுவார் .
நீதிக்கும் விலைகொடுத்து
நிஜங்களை மறைத்திடுவார் .

பதவி ஒன்று கிடைக்கும் வரை
பணிந்து குனிந்து நடந்திடுவார் .
நினைத்தது நடந்து விட்டால்
பச்சோந்தியாய் மாறிடுவார் .

குற்றவாளி யார் என்று சுத்தவாளி சொல்லுங்கள் .
தவறெங்கே நடந்ததென்று
மனதை தட்டி கேளுங்கள் .

பட்டு பட்டும் திருந்தாமல்
துட்டுக்காய் ஓட்டு விற்றால்
படுக்க பாயும் மிஞ்சாது
பார்த்து கேட்டு செயற்படுவீர் .!!!

Thursday, July 23, 2015

வாழாவெட்டி

வாழாவெட்டி
வெட்டிகிட்டு வந்த பிறகு
வீராப்பு பேசாத .
வாழாவெட்டி ஆகிபுட்ட
வாய் மூட கத்துக்கோ .

வளர்ப்பு சரி இல்லையாம்
வையிது ஊரு சனம்
வாசப்படி மிதிக்காம
விலகுது நம்ம இனம் .

உன்ன பெத்த வயித்த நா
உலக்கையால இடிச்சிக்கணும்
பெண்ணை பெத்த பாவத்துக்கு
நாண்டுகிட்டு செத்திடனும் .

புலம்பி தள்ளுறா பெத்தவ
புரிஞ்சி கொள்ளாம பிள்ளைய .

புகுந்த இடத்தில் மாமியா
புடுங்கி எடுக்கிறா அனுதினம்
பொம்புள போல புருசனும்
பொய்கள் எல்லாம் நம்புறான்.

கட்டு கட்டா காசு கேட்டு கழுத்த பிடிச்சி தள்ளுறான்
வெட்டியாய் இருந்துகொண்டு என்னை
வீடு வீடாய் அனுப்பிறான் .

படிப்பு இல்லை என்பதனால்
பத்து பாத்திரம் தேய்த்திட்டேன்
பசியோடு நான் இருந்து
பணம் அனைத்தும் குடுத்திட்டேன் .

பொறுத்து பொறுத்து வாழ்ந்ததில்
பூமியையும் மிஞ்சிட்டேன்
புகுந்த வீடு தனை மறந்து
பிறந்த வீடு வந்திட்டேன்.

கண் கசக்கி வாழ தான் பெண் எனக்கு பிடிக்கல
இன்னுயிரை அழிக்கவும் நான்
இன்று
கோழையில்லை .

வாழாவெட்டி என்றாலும் வாழ வைப்பேன் பெண்மையை .
வாயாடி என்றாலும் வாழ்ந்து காட்டுவேன் உண்மையாய் ..!!

Tuesday, July 21, 2015

தடைகளை உடைத்து தலைமுறை காப்போம்

தடைகளை உடைத்து தலைமுறை காப்போம்
சாதிக்கா பிறந்தேன் நான்
இல்லையே
சாதிக்க பிறந்தேன்
வாய் திறந்து சூளுரைக்க
சுருண்டு விழுந்தேன் மண்ணில் .

தந்தையின்
இரும்புக் கரங்கள் இடியாய்
பதம் பார்த்தது கன்னத்தை .

சாதி தான் நமக்கு சாமி
தெரிந்துகொள்
பக்க வாத்தியம் வாசித்தால்
சாத்தானிடமே சாதிபார்க்கும்
அப்பன பெத்த ஆத்தா .

அப்பா சொன்னா கேளும்மா
அடி வாங்கி சாகாத
அம்மா மனசு தாங்குது இல்ல
முந்தானை தலைப்பால்
மூக்கை துடைத்துக்கொண்டாள்
அம்மா.

தினமும் திட்டுபட்டும் திருந்த மாட்டாயா நீ .
பயம்கலந்த பாசத்தோடு
அக்கா .

முயலாதே தங்கையே
முடங்கி போவாய் .
சாதியால் காதலை
சாதலுக்கு
அள்ளிக்கொடுத்த
அண்ணன் .

உன் படிப்பிற்கும் பதவிக்கும் இது
தேவையா.?
என் நலன் விரும்பும் நண்பர்கள் .

துவண்டு விடாதே தொடர்ந்தும் போராடு
வெற்றியும் நானும் என்றும்
உன் விரல்களில் .
ஒட்டிக்கொண்டு எனக்கு உற்சாகமூட்டும் பேனா .

சித்தி....
இந்த புகைபடத்துல நீயும் அழகு .
என்னையும் இவங்க கூட சாப்பிட
கூட்டிக்கொண்டு போ .

நாளிதழ் ஒன்றில்
இன்று
பிரசுரமாகி இருந்த
துப்பரவு தொழிலாளிகளும் நானும்
உணவருத்திய புகைப்படத்தோடு
அக்காவின் மகள் .

எப்படியோ
இனி அந்த பிஞ்சு மனதில்
சாதிவெறி முளைக்காது என்ற
மகிழ்ச்சியில் நான் .!!

Friday, July 17, 2015

இனி தீர்ப்பு எங்கள் கையில்

இனி தீர்ப்பு எங்கள் கையில்
ஈனப்பிறப்பே .
உன் அன்னையின் அங்கங்களை
ரசித்திடு
அவளும் அழகாய் தான் இருப்பாள்
உன் அந்தரங்கத்திற்கு .

அருவருப்பான வார்த்தையை
அவன் முன் வசைபாடிவிட்டேன் .
இப்படி அசிங்கமானவளா நான்
சற்று
தடுமாறி விட்டேன் .

தரம்கெட்டவனுக்கு
தங்கை என்ன
தமக்கை என்ன
பார்வையில் அனைவரும்
தாசிகள் தான்
இதில்
தவறேன் நான் இழைத்தேன்
தாயை இழுத்து .?

பெண்மையின் பெருமையை
மறந்து
பொறுமை இழந்தேனா .?
புனிதமான தாய்மையை
பொய்யாய் இகழ்ந்தேனா .?

பெற்றவள்
ஈன்ற பொழுதினில்
கண்ணே ..கனியமுதே என்றல்லவா
அணைத்து இருப்பாள்
காடையனே களவானியே என்றா
வளர்த்து இருப்பாள் .

மன்னித்து விடுங்கள் அன்னையரே
மறுபடி களங்கம்
உம் கருவறைக்கு இல்லை .

இனி
காமத்தோடு பெண்ணை பார்த்தால்
அவன் கண்கள் பறிப்போம் .
கரம்கொண்டு தீண்டினால்
கழுத்தை அறுப்போம் .
கட்டியவளைத் தவிர மற்றவளை
இரத்த உறவென நினைக்க செய்வோம்
ஒருவனுக்கு ஒருத்தியே
உலக நியதிஎன
உரக்கச் சொல்வோம் ...!!
ம்ம்ம் இனி தீர்ப்பு எங்கள்
கையில் .

Wednesday, July 15, 2015

இதயம் உள்ளோர் சொல்லுங்கள் இனி எப்படி பெண் வாழ்வாள்

இதயம் உள்ளோர் சொல்லுங்கள்  இனி எப்படி பெண் வாழ்வாள்
சீதையின் தங்கையாம்
சீண்டிப் பார்கிறான் .
சினத்துக்கொள்வதே இல்லை நான்
இங்கு என்ன இராமாயணமா நடக்கின்றது
தீக்குளித்து நிருபிப்பதற்கு .!

கலியுகம் இதில் கண்ணகிக்கும்
கள்ளக்காதலி பட்டம் தான் .

உச்சி முதல் பாதம் வரை
உடையால் மூடிக்கொண்டால்
இச்சை கொண்டவர் எச்சில் வடிக்காமலா செல்வார்
இஞ்சு இஞ்சாய் அளவெடுத்து
ஏற்ற இரக்கமும் பார்த்து சொல்வார் .

தலை குனிந்து நாம் நடந்தால்
தடவி பார்க்க நினைத்திடுவார்
தலை நிமிர்ந்து நடந்துவிட்டால்
தாவணி சரிவை ரசித்திடுவார் .

சாரியில் தொப்புளும்
சட்டையில் அக்கிலும்
சுடிதாரில் பின்புறமும்
மிடியில் முன்புறமும்
கவர்ச்சி தூக்கும் என்பார்
கண்களால் கற்பழிப்பார் .

சிரித்தால் தாசி என்றும்
முறைத்தால் முறைதவரியவள் என்றும்
பட்டங்கள் பல கொடுப்பார்
இல்லை
படுக்கைக்கு வா என்றழைப்பார் .

கன்னித்திரை உடையவில்லை -எம்
கற்பில் களங்கமில்லை
இருப்பினும் விலைமாதாம்
இது தான் பெண் விதி கேளீர் .

இன்னும் உண்டு எம் வாழ்வில்
எழுதிட தான் வார்த்தை இல்லை
இதயம் உள்ளோர் சொல்லுங்கள்
எப்படி தான் பெண் வாழ்வாள்...??!

Monday, July 13, 2015

நான் வீரத் தமிழன்டா

நான் வீரத் தமிழன்டா
மண் தன் கண்ணான பொன்னென
மானம் காத்த என் அப்பனின் தாத்தன்.
மறத்தமிழன் நான் என மார்தட்டி சூழ் உரைத்த என் தாத்தன் .
பறந்து போயினர் விண்ணோடு இல்லை நீங்கள்
மடிந்து கிடப்பீர் மண்ணோடு .

பார்போற்றும் என்இனம் பகடை காயாய் போய்விட
ஆட்டிப்பார்க்க நினைகின்றாய்
அடக்கி தான் வைக்கின்றாய் .

அட மூடனே ..
புலிக்கு பிறந்தது பூனையல்ல
பாய்ந்திட கற்றுக்கொடுக்க தேவையல்ல .
பதுங்கி வாழ்வது பயந்தல்ல
பலி தீர்க்கும் நாள் இன்றல்ல .

மகாபாரத போர் இதுவல்ல
சதிக்கு இங்கு வேலையில்லை
சுதந்திர தமிழன் நான் -என்னை
துகிலுரிக்க எவனும் பிறக்க வில்லை .

இனவெறி எனக்குள் துளியும் இல்லை -என் இனமழித்தால் பகைவர் தலை கொய்யும் துணிவு உண்டு .
சாதி மதமென்றால் தவறேன்பேன்
தமிழன் நீ என்றால்
அகமகிழ்வேன் ...!!!

Sunday, July 12, 2015

நான் நவநாகரீக பெண்

நான் நவநாகரீக பெண்
பத்து மாதம் சுமப்பதா
இது உனக்கு அடுக்குமா
என் அழகென்ன ஆவது
அது உனக்கு புரியுமா.?

ஐந்து நிமிட சுகத்தினில்
ஆயுள் முழுக்க சிறைபிடிக்க
சிறகுள்ள பறவை தனை
சிறிதேனும் எண்ணாதே .

தாலி எனக்கு தேவை இல்லை .
தாயாகும் எண்ணமில்லை
பூ சூடி பொட்டு வைக்கும் பட்டிக்காடு நான் இல்லை .

கண்களுக்கு விருந்தளிக்க
கையில் கணிணி உண்டு
காலம் கழிக்க அதில் பலதுமுண்டு

மகிழ்ச்சி எனக்கு மதுவில் உண்டு
மஞ்சம் தரும் சுகமும் அதிலுண்டு
அணைத்துக்கொள்ள தினம் ஒரு தோழன் உண்டு
ஆட்டம் போட தோழிகள் உண்டு .

சுகம் தரும் இந்த சுதந்திரம்
துறந்து
தாயாக நினைப்பேனோ உன்
கருவினை சுமந்து
தந்தையாகும் தாகம் உனக்குள்
உண்டென்றால்
தாயாக மாறிடு கர்ப்பத்தை சுமந்து.!!

Saturday, July 11, 2015

என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி
அதோ வருகின்றாள்
விழி எனும் வில் சுமந்த
என் மணப்பெண் .
நொடிப்பொழுதில் என்னை வீழ்த்தும்
கொலைகாரி .

உதட்டசைவில் என்னை அடக்கும்
சர்வதிகாரி .
கொடிஇடை அசைத்து
என்னை முடமாக்கும் கொடுமைக்காரி .

சத்தம் இன்றி யுத்தம் செய்யும் தீவிரவாதி .
சிரிப்பிலே சிறைப்பிடிக்கும்
சூனியக்காரி .

மதியை மதி மயக்கும்
மாயாவி
மலர்களும் மண்டியிடும்
அவள் முன் சேயாகி .

புற்கள் சுமக்கும் அவள் பாதம்
சுகமென்று .
புழுக்கள் நினைக்கும் அவள் காலால் மரித்தால் சுவர்கமென்று.

காற்றுக்கும் காதலிக்க கற்றுகொடுப்பாள்
கடல் அலைகளையும் கவிதைகள் பாடவைப்பாள்.

கண்ணில் என்முகம் காணும்வரை
கடவுளாய் அனைவருக்கும் காட்சி தருவாள் .
காதலன் நான் அங்கே தோன்றி விட்டால்
ராட்சசி ஆகி என் உயிர் எடுப்பாள்..!!

Thursday, July 2, 2015

சுற்றும் உலகமும் சுழற்றும் மனிதனும்

சுற்றும் உலகமும் சுழற்றும் மனிதனும்
தாயை விற்று தாய்ப்பால் வாங்கி
தாகம் தீர்க்கும் காலம் இது .
சேயை இழுத்து சேலை விடுத்து
தன் ஆசை போக்கும் பூமி இது .

மண்ணுக்கும் பொன்னுக்கும் ஆசைப்பட்டு
மானத்தை இழக்கும் மனிதம் இது
மரித்த உடலிடம் மரியாதை கேட்டு மண்டைகள்
உடைக்கும் உலகம் இது .

துப்பாக்கி முனையில் கடவுள்கள்
வாழும்
துர்பாக்கிய நிலைமை இது.
வாழுவதாய் கூறிக்கொண்டு
இறந்து விட்ட நீதி இது.

காசுக்காய் கல்வித்தாய் மௌனமாய் விலைபோகும் நேரம் இது .
காக்கியும் காவியும் கரங்கள் கோர்த்து
களவினில் மூழ்கும் நிஜம் தான்
இது .

மனிதத்தை அறுத்து மாமிசமாய் புசித்து
மிருகங்கள் நடமாடும் காடு இது
உதிர ஆற்றிலே உடைகள் கழுவி
புண்ணியம் என்கின்ற வாழ்க்கை இது .

Wednesday, July 1, 2015

நிலாப்பெண்ணும் நிஜங்களும்

நிலாப்பெண்ணும் நிஜங்களும்
மின்மினிகள் கோர்த்து மாலை செய்தேன்
வெண்மதி அவளுக்கு சூடிடவே
நான் கண்ட நங்கை
முகம் மறைத்து
தேய்பிறையாக காட்சி தந்தாள் .

மாலையிடும் வேளை வருமென்று
விண்மீன்கள் இடத்தில் சரணடைந்தேன் ..
வேதனை சற்று மிகுதியாக
தேவியை தேடி நான் பறந்தேன் .

கலைந்திடும் மேகங்கள் கூடி வந்து
கைகட்டி வேடிக்கை பார்த்ததுவே
ஆதவன் செய்த சதி இதென்று
அலைகடல் நுரைகள் விம்மியதே ..

வீசிடும் தென்றலும் விரைந்து வந்து
மலரிடம் சேதி சொல்லியதே .!
மலர்செடி சுமந்த வேர்கள் மெல்ல வினாக்கள் தொடுத்தன மண்ணிடமே.

பொறுமை காத்த பூமிமாதா
கோபத்தின் மிகுதியில் விடையளித்தாள்.
நேர்கோட்டில் பயணிக்கும் முறைசொல்லி
நிழலாகி நான் மறைத்தேன்
வெண் நிலாப்பெண்ணை .
அவள்
நெஞ்சம் கவர்ந்தவன் நேரில் வர
தஞ்சம் புகுந்திட்டாள் என் நிழல்மறைவில்.

கரைந்து அவளும் தேயவில்லை
கதிரவன் சதி செய்ய தேவையில்லை
கன்னி அவளிடம் களங்கமில்லை
சுழல்கின்ற நான்
பொய்யுரைக்க தேவையில்லை .

விளக்கம்பெற்ற வேர்கள் எல்லாம்
விளங்கிக்கொண்டது புவியியலை
வெண்ணிலா முழுமுகம்
காணவென்று
எண்ணிகழித்தன நாழிகையை ..!!!

Wednesday, June 24, 2015

நெருங்கி வா முத்தமிடாதே

நெருங்கி வா முத்தமிடாதே
நேர்முகம் நோக்கி
நினைவினை இழந்த
அழகான இருவரின்
அகோர முத்தம் அது.
முத்தத்தின் சத்தத்தில் மூச்சிரையாகினர் பலர் .
முச்சி நின்றே போனது சிலருக்கு .

அலைபேசி அலறல்கள்
அவசர ஊர்திகள் .
குருதி குளித்த பாதை
அங்காங்கே மாமிச சிதறல்கள் .

உறவை இழந்தவரும்
உடல் உறுப்புகளை இழந்தவரும்
ஒப்பாரி சத்தங்களால்
துடிதுடித்த கணம்தான் அது.

ஓய்வின்றி உழைத்ததால் ஒருவருக்கு
உறக்கத்தின் உச்சமாம் .
வயிறு முட்ட குடித்ததால்
மற்றவருக்கு
போதையின் கிரக்கமாம்.

காக்கிச்சட்டை போட்டவர்கள்
விரட்டிக்கொண்டு இருந்தார்கள்
விருந்துண்ண வந்த காகங்களையும்
வேடிக்கை பார்க்க வந்த மனிதர்களையும் .

மறுநாள் பத்திரிகை செய்தி மட்டும்
"இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஐம்பதிற்கு மேற்பட்டோர் பலி "
என் பார்வையில் முத்தம்
மோதலாகியது ...!!

இவன் என் தம்பியாவான்

இவன் என் தம்பியாவான்
மடியில் முகம் புதைத்த
மயக்கத்தில்
ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.

இடை இடையே கரங்கள்
அவள் இடையை வருடிக்கொண்டிருந்தது .

இடம் கிடைக்கும் சமயத்தில்
முத்தம் எனும் பெயரில்
முகத்தை எச்சில் படுத்தினான் .

எட்டிப் போ என்றால் அவள் பின்
சுற்றி சுற்றியே நின்றான்
சூடுதேவை என்பதற்காய் .

ஆசையோ ஆத்திரமோ
இரண்டில் எப்படி அவன் அணைத்தாலும் நகம்பட்டு
ரணமாகும் தேகம் தான் .

யார் இவன் என் இப்படி .?

எங்கிருந்து வந்தானோ நானறியேன்
எனக்குள் எப்படி நுழைந்தானோ நானறியேன் .
மிச்ச உணவை தான் வைத்தேன்
வாலாட்டி வந்துவிட்டான் .

நாய் என்று நான் உரையேன்
அவனெனக்கு தம்பி ஆவான் .
நன்றிகெட்ட மனிதனைவிட
இவன் எனக்கு மேன்மையாவான் .

Tuesday, June 23, 2015

உண்மையில் நானும் ஒருவித பைத்தியம் தான்

உண்மையில் நானும் ஒருவித பைத்தியம் தான்
ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தேன் .
ம்ம்ம் கவிதையாம் .
பைத்தியகாரி
எனக்கு நானே வசைப்பாடிக்கொண்டேன் .

பர்மா கொடூரத்தை தடுக்க நினைத்தேனா.?
ஓடுகின்ற குருதி ஆற்றை நிறுத்த நினைத்தேனா .?

ஒடுக்கப்பட்ட இனங்களுக்காய்
ஓயாமல் உழைத்தேனா .?
இல்லை
பறிக்கப்பட்ட உரிமைகளை
பாதியேனும் கொடுத்தேனா .?

பாலியல் கொடுமைகளுக்கு நீதி
கேட்டேனா.? - இல்லை
பாதிக்க பட்டவர்களுக்காய் போராடி மாண்டேனா.?

சாதி மதம் வேண்டாம் என்று
ஐ.நா .சபை சென்றேனா .?
அங்கு
அடக்குமுறை வேண்டாம் என்று
அதிரவைத்து வென்றேனா.?

அரசியல் சாக்கடை என்று அறியாமல் இருந்தேனா .?
அறிந்து அதற்கு ஐயா,சாமி
போடாமல் சென்றேனா .?

ஏழைகள் மேல் இரக்கம்கொண்டு
என் இருப்பிடம் அழைத்தேனா .?
என்னிடம் இருப்பதை கொடுத்துவிட்டு
அவர்கள் போல் வாழ்ந்தேனா .?


எதுவுமே செய்ததில்லை இதுவரை இந்த கன்னி .
இதைகூட கிறுக்கிவிட்டேன்
கவிதை என்று எண்ணி .!!!!

Saturday, June 20, 2015

இதுவும் ஓர் இதமான காதல்

இதுவும் ஓர் இதமான காதல்
அரவம் நிறைந்த வனமொன்றில்
தனிமை சூழ்ந்த பொழுதொன்று
பதை பதைத்து மிரளுகையில்
பரிதாபமாய் பார்த்தது கருடன் ஒன்று .

பாசத்தோடு அருகில் வந்து
பேசிநின்றது ஏக்கத்தோடு.
துணையாய் உனக்கு நான் வந்து
துன்பம் தீர்க்கும் நாள் இன்று
விலையாய் வேண்டும் நீ என்று
வேண்டிக்கொண்டது காதல்தனை .

உயிரா உள்ளமா என்றபோது
உயிரே என்றது உள்மனது
காதல் கிடைத்த கருடனது
காவலனாய் மாறிய தருணமது .
கருட அரவ மோதலிலே வெற்றி என்றும் கருடருக்கே .

காதலி கைபிடித்து காதலனாய்
கருடனவன் நாடுவந்தான் .
கன்னிக்கு கணவன்
கருடனா....?
காறி உமிழ்ந்தனர் கண்ணில்பட்டோர்
குரங்கு கையில் பூமாலையாம்
குசுகுசுத்தார் இன்னும் சிலர் .

கருடன் தன் நிலை உணர்ந்து
இன்னுயிர் துறக்க முடிவெடுத்தான்
அரவம் நிறைந்த வனம் சென்று
அதற்கே உயிரை தானம் செய்தான் .

கண்ணாளா எங்கே சென்றாய்
கதறிவிட்டாள்
கண்ணீர் வழிந்திட துடித்துவிட்டாள்
கண்டது கனவென அறிந்தவுடன்
கன்னி தனக்குள் சிரித்துக்கொண்டாள் .!!

Thursday, June 11, 2015

எனக்குள்ளும் அந்த ஒன்று உருவானது

 

பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடைப்பட்ட தருணம்.
அரும்பொன்று மலரான நிமிடம்
இரு விழிகளின் வழியே
அந்த ஒன்று
இயத்தை திறந்த நொடி .

தரணியை அளக்க நினைத்தவள்
தன்நிலை மறந்தவள் ஆனேன்
பார்போற்ற வாழ்ந்திட நினைத்தவள்
பரிகாசிக்கப்பட்டு போனேன் .

நெருப்பையும் நேர் எதிர் நோக்கியவள்
நிலம்பார்த்து நடக்கலானேன்
நிஜமா இவைஎன்று மீண்டும்
எனை
நானே கேட்கலானேன் .

கண்ணிற்கு தெரியாத உருவம் என்றார்
கவிஞர்கள் பொய் உரைப்பார் என்றேன்
கடுவுளும் அன்று மாட்டினார் என்றார்
நாத்திகம் பேசி நழுவிச்சென்றேன்.

இல்லாத அந்த ஒன்று எனக்குள்ளும் இருக்கும் என்றார்
இரும்பான இதயமிது திறப்பது கடினமென்றேன்.
இலகுவாக்கும் உன்னை என்றார்
ஏளனமாய் நகைத்துச் சென்றேன் .

இன்று என்ன ஆனது !
எல்லாமே ஆனது ..
எனக்குள் காதல் உருவாக ..
என் ஆணவம்மெதுவாய் அழிந்திடலானது ...!!!!

Thursday, May 21, 2015

கவியும் கதை சொல்லும்

கவியும் கதை சொல்லும் --கயல்விழி
சிட்டாய் பறந்தவள்
சிறகுடைக்கப் பட்டேனே .
சிறைக்குள் அடைப்பட்ட
சில்வண்டாய் ஆனேனே .

வலி என்னை வாட்டுகையில்
வழி தெரியாது தவிக்கின்றேன் .
உயிரான கவி வழியே
உண்மை நிலை உரைக்கின்றேன் .

சொந்தங்கள் சூழ உண்டு
துணையாக எவரும் இல்லை
என் துன்பம் பகிர்திடவே
என்னவனும் அருகில் இல்லை .

தலைகோதி மாடிசாய்க்க
தாயவள் உலகில் இல்லை .
தரித்திரமாய் பிறந்ததினால்
தந்தையும் இங்கு இல்லை .

தனிமை என்னை கொல்லுதே ..
மரணித்திட சொல்லுதே ..
கண்ணீரின் வெப்பம் தாங்காது
தலையணையும் விம்முதே .

தற்கொலை உகந்தது அல்ல
தமிழுக்கு அது அழகும் அல்ல
என்னைத்தேற்றிக் கொள்கின்றேன்
இதனால் தான் இன்னும் வாழ்கின்றேன்....!!!!!!!!!

Wednesday, May 20, 2015

கற்பழிப்பிலும் லாபம் தேடும் காட்டு நரிகள்

கற்பழிப்பிலும்  லாபம் தேடும் காட்டு நரிகள் --கயல்
 தீவிற்குள் ஒரு தீவில்
தீபமாக எண்ணியவள் .
செடிதனில் அரும்பாகி
மலர்ந்திட விரும்பியவள் .

பள்ளி படிப்பு முடித்து விட்டு
பட்டப் படிப்பு முடித்திடனும்
புத்தகம் தூக்கிய பூவை இவள்
போட்டு வைத்த எண்ணம் இது .

புள்ளி மானாய் துள்ளித் திரிந்தாள்
துரத்துவது புலி என அறியாமல் .
பிடித்தது புலிக்கூட்டம் ஒன்று
புசித்தது பூவையை கசக்கி .

பெண்மையோடு பொன் உயிரும்
போனபின்பு
புலிக்கூட்டம் பதுங்கிக்கொண்டது
நீதியின் பின் .

பிள்ளையை இழந்த பெற்றவர்கள்
கண்ணீரில் குளித்து நிற்கையிலே
லாபம் தேடும் நரிக்கூட்டம்
கூருபோடுது கன்னியின் இறப்பை .

கற்பழித்த காமுகர்கள் கண்ணெதிரே
நின்றாலும்
அரசியல்வாதி கைகோர்த்தோர்
அறிந்திடார் அவர்களைத்தான் .

கருநாள் வெறும் கண்துடைப்பே
இது அரசியலின் கற்பழிப்பே
இறந்தவளுக்கு வழி விடுங்கள்
இனியேனும் அவளை வாழ விடுங்கள்..

Tuesday, May 19, 2015

பிடிக்கும் - பிடிக்காது

பிடிக்கும்   -  பிடிக்காது
ரசிக்க மாட்டேன் உன்னை -நீ
திமிர் பிடித்தவன்
பேச மாட்டேன் உன்னோடு -நீ
ஆணவக்காரன் .

காதலிக்க மாட்டேன் உன்னை - நீ
கர்வக்காரன் .
முத்தமிடவும் மாட்டேன் - நீ
முரடன் .

உன் பெயர் உச்சரிக்க மாட்டேன் - நீ
பொல்லாதவன் .
உன்னை நேர்நோக்க மாட்டேன்- நீ
நேசிக்க தெரியாதவன் ..

அட

நான் விரும்பியவை எல்லாம்
விரும்பாதவன் உன்னிடத்தில் .!

அடேய் திருட்டுப் பயலே
விட்டு விடு அனைத்தையும் இல்லையேல் .¿
விரும்பிடு என்னை மட்டும் .!!!!!""

(பெண். பிடிக்காது என்றால் பிடிக்கும் என்று அர்த்தம் )

Monday, May 18, 2015

கல்யாணக் கல்யாண கனவு

கல்யாணக்  கல்யாண  கனவு  -  கயல்விழி
கோபக்காரனாய் ஒருவன் வேண்டும்
கொஞ்சலும் தினம்தினம் வேண்டும்
ஆணவம் சற்று இருத்தல் வேண்டும்
அன்பிற்கு மட்டும் அடங்க வேண்டும்
அத்தை மாமன் உறவு அவன் தர வேண்டும்
அன்னை தந்தையாய் அவர்களே வேண்டும்.

***************************

நாத்தனார் சண்டைகள் சின்னதாய் வேண்டும்
அதில் நான் தினம்
தோல்வியுற வேண்டும்
மன்னிப்பு கேட்டு நான் மண்டாட வேண்டும்
அன்போடு மன்னிப்பையும் அவர்கள் அள்ளித்தர வேண்டும்

***********************
ஊரார் உச்சிக்கொட்டி தினம்
பார்க்க வேண்டும்.
கண்பட்டு விடும் என்று -அத்தை
தினம் சுத்திப்போட வேண்டும்
மருமகள் மகளாக மாறவேண்டும் வேண்டும்.
என் மணவாழ்க்கை மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும்.

**************************
கொஞ்சிட குழந்தைகள் மூன்று வேண்டும்- அதில்
தலைமகனாய் என்னவனே இருக்க வேண்டும்
குடிசைவீடு கோயிலாய் மாறவேண்டும்
குலமகளாய் நான் அங்கு வாழ வேண்டும் .

Saturday, May 16, 2015

ஒன்றுபடுவோம் உரிமைவெல்வோம்

ஒன்றுபடுவோம் உரிமைவெல்வோம் - கயல்விழி
குண்டுமழையிலும்
குருதி வெள்ளத்திலும்
ஈழத்தமிழர் அழிகையில்
தலைகவிழ்ந்து நின்றான் கோழைத்தமிழன்...

€€€€€€€€€€€€€€€€€

ஐக்கிய நாடுகள் அர்த்தமற்று
போகையில்
அயல்நாடுகள் ஆஹாஹா
ரசித்தன..

€€€€€€€€€€€€€€€€

அன்னையினதும் தங்கையினதும்
அம்மன அணிவகுப்பை
கண்ணெதிரே கண்ட அன்றைய
ஆணுறுப்பு அறுக்கப்பட்ட ஈழத்தமிழனின் துடிப்பை
ஊமையாகி வேடிக்கை பார்த்தது உலகம் .
€€€€€€€€€€€€€€€€€€€€€€ ்

இறந்த உடல்களைகூட இச்சைக்கொண்டு எச்சில் படுத்தியது
காமவெறி பிடித்த கழுகுகள் .

€€€€€€€£€€€€€€€€€€€€€€

கட்டபொம்மனை போல்
பட்டுத்தலைவனையும்
காட்டிக் கொடுத்த எட்டப்பன்கள்
கூடிக்களித்தனர் ஈழ அழிவினை .
€€€€€€€€€€€€€€€€€€€€€

இழப்பினை தாங்கி
எமனோடு போராடி
மிஞ்சிய உயிர்கள் இன்று
நெஞ்சிலே நெருப்பினைக்கொண்டு
வாழுது பலதுயர்கள் கண்டு .
€€€€€€€€€€€€€€€€€€€€€

அவருக்காக
கண்ணீர் அஞ்சலிகள் வேண்டாம்
கறுப்புக்கொடிகளும் வேண்டாம்
மறக்குலந்தோர் நாங்கள் .
மறைந்து திரிதலும் வேண்டாம்

€€€€€€€€€€€€€€€€€€€€€€€€

தாய்மானம் காக்க வேண்டும்
தரணி
தமிழனை போற்றிட வேண்டும்
உரிமைகள் வென்றிட வேண்டும்
முதலில் நாம்
ஒன்றுபட வேண்டும்..
€€€€€€€€€€€€€€€€€€€.

Saturday, May 9, 2015

அன்னையே உனக்கு -அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையே உனக்கு -அன்னையர் தின வாழ்த்துக்கள்
கருவறையில் இடம்கொடுத்து
மார்போடு சேர்த்தணைத்து ..
கண்ணே மணியே என்று
தாலாட்டில் உறங்க வைத்து ..
உதிரத்தை உருக்கி தினம்
உணவாய் தந்த பாலும்
விழிநீராய் வழியுதம்மா
வேதனையை தூண்டுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

வஞ்சியே உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடுகையில்
உன் அன்பை விட அழகான
வார்த்தை ஒன்று இல்லையென்று
அகராதியும் அதிர்ச்சியாகி
அன்னையே உன்னை தேடுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

பெற்றவளே உன்னை போற்ற
பூமிதனில் ஓர் நாளாம்.!
புத்திக்கெட்ட மனித இனம்
பொருந்திக் கொண்டது இந்நாளை

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥..

உயிர் கொடுத்த உத்தமியே
உனக்கொரு நாள் போதாது
உலகம்கூட உன்அன்பிற்கு
ஈடு இணை ஆகாது ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

கண்மணியே என் அருகில் -நீ இல்லை என்றபோதும்
இறையடியில் எப்போதும் இன்பமாய் வாழ்ந்திடனும் ..
இறையருளும் என் நினைவும்
என்றென்றும் உன்னோடு !!!!!!!!!!!

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

(வாரியணைக்க நீ இல்லை
இருப்பினும் வாழ்த்துரைத்தேன்
நானுனக்கு ......!!!

உலகில் வாழும் அனைத்து அன்னையருக்கும் இதயம் கனிந்த "அன்னையர் தின வாழ்த்துக்கள் "

வணங்குகின்றோம் அன்னையரே வாழ்த்திடுங்கள் எங்களை )

Tuesday, May 5, 2015

நீ வேண்டும் என் உயிரே

நீ வேண்டும் என்  உயிரே
முரணும் முறைப்புமாய்
நீயும்
கெஞ்சலும் கொஞ்சலுமாய்
நானும்
முதல் முறை எனக்குள்
இயற்கை அனர்த்தம்
இதயத்தின் ஓரத்தில் .....

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

நீ சிரித்துப் பேசிய தருணத்தில்
என்னை
மறந்து போனேனா ..?
இல்லை
அன்பெனும் வேல்தொடுத்து
சிறை பிடித்து போனாயா
..???

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

ஆளில்லா வனத்தினில்
விரல்பிடித்து நடந்தபின்
இதுவரை போதும் என்று எதை நம்பி விட்டுச் சென்றாயோ ...????

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

காரிருள் சூழ்ந்த கானகத்தில்
கண்ணீரோடு தவிக்கின்றேன்
கண்ணா என் கரம்கோர்த்து
கரை சேர்க்க வந்துவிடு ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

தேவதையாய் நான் இல்லை
உன்மேல் திடமான காதல் உண்டு
தாரமாகி உனக்கே நான் தாயுமாகும் திறனும் உண்டு...
விலகாதே என் உயிரே
என்றும் வேண்டும் நீ எனக்கு ..!!!

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥