Wednesday, April 13, 2016

தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016


துர்முகி தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டினை கொண்டாடும் அனைத்து தமிழ், உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

HappY TamiL, Singhala NEW YEAR

Monday, April 11, 2016

நிழல்


நீயும் நானும் 
ஒரே ஜாதி தான்
எட்டி உதைத்தாலும் 
விட்டுப்போவதில்லை யாரையும்
கெட்டவரோ நல்லவரோ
எப்போதும்
இணைந்தே இருக்கிறாய்
ஏனோ 
அவர்கள் தான் கண்டுகொள்வதில்லை உன்னை.
என்னைப்போல்
உனக்கும் இருளைக் கண்டால்
பயமோ
மறைந்துவிடுகிறாய் மண்ணோடு.
நிஜமாய் தான் நீ
இருக்கிறாய் 
நிறத்தில் கறுப்பாகி விட்டாயே
அதனால் தான்
பொய்யோடு ஒப்பிட்டும்
விடுகிறார்கள்.
உன்னை பலருக்கு பிடிக்காத
போதும்
என்னைப் போல் சிலருக்கு
பிடித்து விடுகிறது
காரணம் 
எம்மை பிரிவதே இல்லை நீ.

உன்னை நினைக்கப்போவதே இல்லை...!!!!

வெறுக்க மட்டும் கற்றுக்கொள்கிறேன் 
எவரையும் இனி நேசிக்கப் போவதில்லை .
உங்களையும் தான் பட்டாம்பூச்சிகளே 
இனி
என்னை வட்டமிடுவதை
தவிர்த்திடுங்கள்
எங்கோ சென்று 
வாழுங்கள் 
காதல் பறவைகளே
இனி
என் முன் கொஞ்சி விளையாட
வேண்டாம்.
இன்றே கருகி போய்விடுங்கள்
இல்லையேல்
களவு போய் விடுங்கள் என் ரோஜாச் செடிகளே
இனி இவள் உங்களையும்
கவனிக்கப் போவதில்லை.
என் வருகைக்காய் காத்திருக்க
வேண்டாம் ஜக்கி
தெருவிலும் உனக்கான
எலும்பு துண்டுகள் கிடைக்கலாம்.
போ பெத்திமா 
உன் உறவுகளோடு
இணைந்து வானில் பற
இனி இவள் உனக்கும்
தேவையற்றவள்.
என்னை 
எதிர்பார்க்க வேண்டாம்
மேரி பாட்டி 
இனி இவள் ஸ்டெல்லாவாய்
மாறப்போவதில்லை.
மன்னித்து விடுங்கள்
என் மரத்தடி உறவுகளே
இனி இவள் உங்களையும் நேசிக்கப்போவதில்லை.
இதுவரை உறவாய் இருந்த இவைகளையே 
நேசிக்காத போது இடையில் வந்த உன்னை மட்டும் என்ன 
போடா போ
இனி
உன்னை நினைக்கப்போவதே இல்லை...!!!!

Thursday, April 7, 2016

தாயுமானவன்


தாயாய் சுமக்கும் 
தாரமானவளே
தா 
எனக்கும் தாயாகும் வரம் 
என்கிறான்
ஆணிடம் தாய்மைக்கான 
சாத்தியம் இல்லை 
என்றேன் உறுதியாக
இருக்கிறது
பெண்ணே 
அந்த மூன்று நாட்கள்
அமைதியாகிறேன்
ம்ம்ம்
பெண்மையின் வலி புரியும்
ஆணிடம் தாய்மை இருக்கும்
அது வெளிப்படும் தினமாய்
அந்த மூன்று 
நாட்கள் இருக்கும்..!!!

Wednesday, April 6, 2016

ஊடலும் கூடலும்




எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அணைத்துக்கொள்வதை
தவிர
எதுவும் நினைவில் இருக்காது
எனக்கு..!

Tuesday, April 5, 2016

காதல் பித்து

உண்மையா இருக்கணும்
உனக்கு மட்டுமே இருக்கணும்
உறுதியாய் சொல்கிறான்
உணர்ந்து கொள்ள 
முடியாதவனாய்
என் உள் உணர்வுகளை .
இதயத்தின் லட்டப் 
சத்தம் 
இரவின் அமைதியை கிழித்து
இமையத்தையும் தாண்டி
பேசிக்கொண்டே இருக்கிறான்.
ஒலித்துகொண்டிருக்க அவன் மட்டும்
இலக்கணம் அறிந்திருக்கிறாயா 
நீ
இலக்கியத்தில் போல
கள்ளத்தனமாய் காதல் செய்வோம்
பின்
அகிலமும் அறியச் செய்வோம்
முத்தம்கொடு 
முத்திவிட்டது உன்மேலான
காதல் பித்து
ஆணின் அத்தனை ஆணவமும் 
அழிந்தது உன் அன்பின் 
முன்னால்
முத்தம் கொடு
முக்தி பெற வேண்டும் உன்னை
நித்தித்தவையில் இருந்து.
ஏதேதோ 
உலறிக்கொண்டிருக்கும்
அவன் இதழ்களை கவனிக்காதவளாய்
இதோ
இன்னும் 
இறக்கை இன்றி பறந்துகொண்டிருக்கின்றேன்
வானில்
அவன் 
இதயத்தில் இருப்பிடம்
கிடைத்த மகிழ்ச்சியில்...!!!!

Sunday, April 3, 2016

ஒருவேளைஅப்படி நடந்திருந்தால்


ஒரு வேளை அப்படி 
நடந்திருந்தால்
என் வீட்டு பெத்திமா
அதன் பாஷையில் கீக் கீ
என்று அழுதிருக்கும்
என் லவ்பேர்ட்ஸ்
ஏதோ ஒரு ராகம்
நிச்சயம் சோகமாய்
இசைத்திருக்கும் .
நான் வளர்த்த
ரோஜா
இன்று
நிச்சயம் மலரொன்றை
பிரசவிக்க தயாராகி இருக்கும்
எனக்காக.
இது வரை 
சிரித்துக்கொண்டிருந்த
என்
மரத்தின் கிளைகள்
ஸ்தம்பித்து போயிருக்கும்
ஆணிவேர்
அறுந்துவிட்டதால்.
மாதம் ஒரு முறையெனும்
ஸ்டெல்லாவை காணும்
முதியோர் இல்லத்து
மேரி பாட்டி
பிராத்தித்துக்கொண்டிருப்பாள்
கர்த்தரே கயலை மீண்டும் தாவென.
ம்ம்ம்
அப்பிடி எதுவும் தான்
நடக்கவில்லையே
இப்போது
ஏமாந்து போன எமன்
என்னை சபித்துகொண்டிருப்பான்
இன்றும் என்னிடம் 
இருந்து எஸ்கேப் ஆகிவிட்டாள்
இவள் என்று.!!!!

Saturday, April 2, 2016

காதல் இப்படியும் இருக்கலாம்



விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க

நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்

நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல

திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட

தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள

அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்

அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.

குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்.

காதலை சுமந்து காத்திருக்கிறேன்
நான்.