Tuesday, March 31, 2015

உதிர்ந்து போன உயிரற்ற காதல்


உதிர்ந்து போன உயிரற்ற காதல்-கயல்விழி
நீ விரும்பும்
நந்தவனமும் நதிக்கரையும்
நஞ்சையும் புஞ்சையும்
என் வசம் இல்லை .

பட்டத்து யானையும் பரிவாரமும் பொன் கட்டிலும் பூ மெத்தையும்
என் சொந்தமாய் இல்லை .

அடுக்கு மாடிகளும்
அதி சொகுசு வாகனமும்
ஆணையிட அடிமைகளும்
அள்ளி வீச வைரங்களும்
எனக்கானதாய் இல்லை .

கொஞ்சிடும் குரலும்
கோவைப்பழ இதழும்
சிவந்த முகமும்
கவர்ந்திடும் விழிகளும் என்னிடம்
இல்லவே இல்லை .

என்னிடம் இருப்பதெல்லாம்

தாலாட்டே கேட்காத செவிகளும்
கண்ணீரில் குளிக்கின்ற விழிகளும்
அன்பிற்காய் ஏங்கும் இதயமும்
தனிமைப் படுத்தப் பட்ட உள்ளமும் தான் .

உன் மௌனத்தின் பாஷைகள்
புரிகின்றது உயிரே
கடதாசி பூவிற்கு ஏன்
கடவுளின் தரிசனம் என்று .?

அதுவும் மலர் தானே உயிரே .!

அறிந்துகொள் அன்பே .!
கயல் அற்ற விழியாள் என்காதல்
இன்று
ஏழையாகி போகலாம்
விழிநீர் மழையாகி
கடலோடும் கலக்கலாம் .

நாளை

நீ ரசித்து சுவைத்த
விரும்பி அணைத்த
அனைத்துமே உன்னை வந்து சேரலாம்
நீ நேசிக்காத என்னையும்
நிஜமான என் காதலையும் தவிர.!!

Sunday, March 29, 2015

முதுமை காதல்


முதுமை காதல்
பார்த்த முதல் நாளில்
இதயம் பறிபோகவில்லை
பஞ்சும் நெருப்பும் என
பற்றிக் கொள்ளவும் இல்லை

பஞ்சம் பிழைக்க வந்தேன்
தஞ்சம் நீ கொடுத்தாய்
தாரம் எனும் வரம் கொடுத்து
தாயாக மாற்றி வைத்தாய் .

தரணியில் சேய் வாழ தன்னையே
அர்பணித்தாய்
சுயநலம் கொண்டவர்கள் துரத்தி
ஒதுக்கிவிட

தோழனாய் தோள் கொடுத்தாய்
சுகமாய் சுமந்து கொண்டாய்.
காமமற்ற காதலினை காலம் கடந்து கற்றுக் கொண்டேன் .

தள்ளாடி நடந்தேன் தாங்கிப் பிடித்தாய்
சோர்ந்து நின்றேன் தலைகோதி
புத்துணர்வு தந்தாய் .

போதும் பதியே
போகும் நேரம் நெருங்குகின்றது
உன் நெஞ்சோடு என்னை அணைத்துக்கொள்
இந்த நிலையில்லா உலகில்
என்னை நிஜமாய் நேசித்தவன்
நீ மட்டுமே ...!!!

Saturday, March 28, 2015

பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு


பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு -
பயங்கரங்களை எதிர்த்ததால்
பயங்கரவாதி ஆனோம் ஆம் நாம்
பயங்கரவாதி தான் .

தார் கொதிப்பில் போடப்பட்ட
குழந்தைகளையும்
தாவணி உருகப் பட்ட பெண்களையும்
ஆணுறுப்பு அறுக்கப் பட்ட ஆண்களையும்
கண்டபின் ஆத்திரம் கொண்டோமே
ஆம் நாங்கள் பயங்கரவாதி தான் .

அமைதி காக்கவென அரிதாரம் பூசி
வந்த
சீக்கிய படைகளின் அம்மண வேட்டைக்கு
முற்றுபுள்ளி வைக்க ஆயுதம் எடுத்தோமே
ஆம் நாம் பயங்கரவாதி தான் .

அர்த்தம் அற்ற இந்திய அரசியலால்
அப்பன் அற்ற பிள்ளைகள் இங்கு உருவாக
அனுப்பி வைத்த தலைவனை அடியோடு அழித்தோமே 
ஆம் நாம் பயங்கர வாதி தான்

பேரினவாதங்கள் பேயாகி துரத்துகையில்
எம்மினம் காக்கவென இரையாகி போகின்றோமே 
ஆம் நாம் பயங்கரவாதி தான் .

நாங்கள் உருவாகவில்லை
நீங்கள் உருவாக்கினீர்கள் .
இன்றும்
பயந்து போகவில்லை பதுங்கி நிக்கின்றோம்
பாயும் நாளுக்காக ...!!!!

Thursday, March 26, 2015

இன்றே மரணித்து விடு எந்தன் தோழியே

இன்றே மரணித்து விடு எந்தன் தோழியே
அள்ளி முடிந்த கருங்கூந்தல்
எங்கே .?
அழகாய் ஒளிர்ந்த இரு விழிகள்
எங்கே.?

இன்னிசை பாடும்
மென்குரல் எங்கே.?
என் கவிகளுக்கு உயிர் கொடுத்த
கனிமொழி தான் எங்கே.?

வாதம் புரிந்து வம்பிழுக்கும்
வண்ணமயிலே -நீ
வார்த்தை இன்றி வாடுவதேன்
எங்கள் உயிரே .

காலன் கண் பட்டதோ
கண்ணின் மணியே
கட்டுப் பட்டு விழ்ந்தாயோ
எங்கள் உறவே ...

தேதி குறித்து விட்டார்
எங்கள் செல்வமே
இறையடி சேரும் நாள் அதுவாம்
எங்கள் செல்லமே ..

பூவிற்கே புற்றுநோயா
புரியவில்லையே -இங்கே
புழுவாக துடிக்கிறாளே
பொறுக்குதில்லையே .

அணு அணுவாய் கரைவதாலே
உந்தன் மேனியே -நீ இன்றே
மரணித்திடு எந்தன் தோழியே ...:-(



குறிப்பு :-சுமார் 6மாத காலங்கள் வைத்தியர்களின் போராட்டத்தின் பின் முடியாது என்று முடிவு தேதி குறிக்கப் பட்ட தோழி கனிமொழி இன்று 26-03-2015 வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப் பட்டார்.இவர் உடலில் ஆகக்கூடுதலாக ஐந்து கிலோ சதை கூட எடுக்க முடியாத நிலை.வேண்டிக் கொள்ளுங்கள் நண்பர்களே இப்பிறப்பில் இது போன்ற நோய் வேறு எவருக்கும் வேண்டாம் என்று :-( :-( :-(

ஈழத் தமிழனின் எலும்புக் கூடுகள்

ஈழத் தமிழனின்  எலும்புக் கூடுகள்
சிதறிக் கிடப்பது
புதையல்கள் அல்ல
செல்லால் அறுக்கப்பட்டு
மண்ணுக்குள் மக்கிப் போன
ஈழத் தமிழனின் மிகுதிகள் .

வேடிக்கை பார் சோதனை செய்
சில நேரம்
வெற்றுக் கிரக வாசிகளின் மண்டை ஓடாகவும் மாறலாம்
வீர தமிழனின் எலும்புகள்.

துரோகிகளின் முதுகெலும்பற்ற
முல்லுகூடுகளும் அகப்படலாம்
பத்திரப் படுத்தி வைத்துக்கொள்

நாளை

பாடம் புத்தங்களில் பதித்திடு
பழங்குடியினரின் தோற்றங்கள்
இப்படியும் இருந்து இருக்கலாம்
என்று .

Wednesday, March 25, 2015

என்னை அறிந்ததால்

என்னை அறிந்ததால் - கயல்விழி
வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் 
கைகுலுக்கி கன்னம் உரசுகின்றேன்
காளையரின் தலைக் கோதி
கண்ணீரும் துடைக்கின்றேன்.

தொலைபேசி அணையும் வரை
தொடர்ந்தும் பேசுகின்றேன்
தேவைப் பட்டால் நடுநிசியில்
நடையும் பயில்கின்றேன் .

கணுக்கால் தெரிய உடை அணிந்து
காண்போரை கவர்கின்றேன்
கருங்கூந்தல் முடியாமல்
காற்றிலே விடுகின்றேன் .

கைகொட்டி நகைப்போரை
எதிர்நோக்கி நடக்கின்றேன்
கல்லாக நான் மாறி
கயவர்களை கடக்கின்றேன் .

கண்ணகி நான் என்று
கையில் சிலம்பு எடுக்கவில்லை
பத்தினித்துவம் பேசி ஊரையும்
அழிக்கவில்லை.

சீதையாய் வாழ வில்லை - இங்கு
ஸ்ரீ ராமன் எவனும் இல்லை .

இலட்சியங்கள் எனக்கு உண்டு
ஏளனங்கள் மறக்கின்றேன்
என்னை நான் அறிந்ததால்
எனக்குள்ளே சிரிக்கின்றேன் ...!!!!

Tuesday, March 24, 2015

ஆம் நாங்கள் வேஷம் தான் போடுகின்றோம்

ஆம்  நாங்கள்  வேஷம்  தான்  போடுகின்றோம்-கயல்விழி
கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .

புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரையை
கிழித்துப் பாருங்கள்
குரல்வளை அறுக்கப் பட்ட குயில்கள் நாங்கள் .
கூண்டுக்குள் அடைக்கப் பட்ட கிளிகள் நாங்கள் .

இயற்கை அன்னைக்கு இளைய மகள்


இயற்கை அன்னைக்கு  இளைய  மகள்
சில்லென பனித்துளி
என்னை தழுவுகையில்
மெல்லமாய் தோள் சாய்கின்றேன்
புற்களின் மார்பினில் .

செல்லமாய் தென்றல்
உடல் வருடுகையில்
கட்டி அணைக்கின்றேன்
கதிரவன் ஒளிக்கீற்றை .

மணம் வீசும் அரும்புகள்
நாணி விரிகையில்
சத்தமாய் முத்தம்கொடுத்தேன்
மலரவள் இதழ்களில்.

வளைந்தோடும் நதியின் 
மெல்லிய இசைக்கு
குயிலோடு மெதுவாய்
கானம் படித்தேன்.

கலைந்தோடும் மேகங்கள் 
கூடி இணைகையில்
வண்ண மயிலிடம் அபிநயம்
கற்றேன் .

கற்றதும் பெற்றதும் போதவில்லை
ரசித்ததை விட்டுச் செல்ல மனமுமில்லை

அதனால்

கொள்ளை அழகுள்ள அன்னை
இயற்கையில்
மெல்லக் கலந்தேன்
பிள்ளைக் கவியென ...!!!!

Monday, March 23, 2015

நாகரீகம் வளர்ந்தாலும் நாங்கள் பெண்களே

நாகரீகம் வளர்ந்தாலும்  நாங்கள் பெண்களே
நாகரீக வளர்ச்சி என்றால்
நாணம் மறக்க சொல்லவில்லை
தொப்புளிலும் அக்குளிலும்
தோடு போட தேவை இல்லை .

பேருந்தின் பின் சீட்டில்
காம லீலை தேவையில்லை
பெற்றவர்க்கு பொய் சொல்லி
ஊர் சுற்றத் தேவை இல்லை .

புகைத்தலும் போதையும்
ஆணுக்கு நிகர் ஆக்காது
அடிமை என்று ஆகிவிட்டால்
அழித்திடாமல் விடாது .

உடலுறவின் உச்சத்தை
வலைத்தளத்தில் தேடாதே
மின்னஞ்சல் காதலினால்
கற்பை இழந்து வாடாதே .

நடை உடை மாற்றினாலும்
நளினம் கொஞ்சம் சேர்த்துக் கொள்
உற்று உற்றுப் பார்ப்போர் முன்
உடலை கொஞ்சம் மறைத்துக் கொள்


எம் மொழி பேசினாலும் பெண் என்று
உணர்ந்துகொள்
எந்த நாட்டில் வாழ்ந்தாலும்
கற்பை கண்போல் காத்துக் கொள் .