Wednesday, March 25, 2015

என்னை அறிந்ததால்

என்னை அறிந்ததால் - கயல்விழி
வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் 
கைகுலுக்கி கன்னம் உரசுகின்றேன்
காளையரின் தலைக் கோதி
கண்ணீரும் துடைக்கின்றேன்.

தொலைபேசி அணையும் வரை
தொடர்ந்தும் பேசுகின்றேன்
தேவைப் பட்டால் நடுநிசியில்
நடையும் பயில்கின்றேன் .

கணுக்கால் தெரிய உடை அணிந்து
காண்போரை கவர்கின்றேன்
கருங்கூந்தல் முடியாமல்
காற்றிலே விடுகின்றேன் .

கைகொட்டி நகைப்போரை
எதிர்நோக்கி நடக்கின்றேன்
கல்லாக நான் மாறி
கயவர்களை கடக்கின்றேன் .

கண்ணகி நான் என்று
கையில் சிலம்பு எடுக்கவில்லை
பத்தினித்துவம் பேசி ஊரையும்
அழிக்கவில்லை.

சீதையாய் வாழ வில்லை - இங்கு
ஸ்ரீ ராமன் எவனும் இல்லை .

இலட்சியங்கள் எனக்கு உண்டு
ஏளனங்கள் மறக்கின்றேன்
என்னை நான் அறிந்ததால்
எனக்குள்ளே சிரிக்கின்றேன் ...!!!!

No comments:

Post a Comment